திருவெறும்பூர் பெரியகுளம் பறவைகள் சரணாலயமாகுமா?

திருச்சி திருவெறும்பூர் பெரியகுளம் பறவைகள் சரணாலயமாகுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Updated on
1 min read

திருச்சி திருவெறும்பூர் பெரியகுளம் பறவைகள் சரணாலயமாகுமா என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 திருவெறும்பூர் பெரியகுளம் கடந்த சில மாதங்களாக ஒரு சுற்றுலா மையமாக மாறிவருகிறது. மலைமேல் வீற்றிருக்கும் அருள்மிகு எறும்பீசுவரர் திருக்கோயில் எதிரே உள்ள இந்த பெரியகுளத்தின் கீழ் திருவெறும்பூர், கூத்தைப்பார், நடராஜபுரம், வேங்கூர், அரசங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கரில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இந்தக் குளத்தில் ஒப்பந்த முறையில் மீன் வளர்க்கப்பட்டு வருவதால் பல்வேறு இடங்களிலிருந்து பறவை இனங்கள் இந்த குளத்துக்கு வந்து செல்கின்றன.

 இந்த குளத்துக்கு வந்து செல்லும் பறவை இனங்களில் கொக்கு, ஊசிவால் வாத்து, பூநாரை, நத்தை குத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, காட்டு வாத்து, நீர்கோழி, கானாங்கோழி, மைனா, கரண்டிவாயன், குன்னத்தாரா, வெண்தலை சிலம்பன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

 இந்த பறவை இனங்கள் ஜூன் முதல் மார்ச் மாதம் வரை இங்குள்ள மரத்தில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். குளத்தை சுற்றி மரங்கள் வளர்ந்துள்ளதால் இங்கு வரும் மக்கள் மரத்தடியில் சில மணி நேரம் அமர்ந்து பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

 இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியது: கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஆன்மிக தலங்கள் இருப்பதை தவிர இங்கு பொழுதுபோக்குக்காக

ஒரு பூங்கா கூட கிடையாது.

 உய்யகொண்டான் வாய்க்காலில் நீர் திறந்து விட்டால் இந்த திருவெறும்பூர் பெரியகுளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும். இதை இப்பகுதி மக்கள் பார்த்து ரசித்து செல்வார்கள். தற்போது இந்தக் குளத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் கல்லணைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த குளத்தையும் பார்வையிட்டு செல்கின்றனர்.

குறிப்பாக அதிகாலை நேரத்தில்  குளத்தின் கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அங்குள்ள மரத்தில் தங்கியுள்ள பறவைகளின் சப்தம் காதுக்கு இனிமையாக இருந்து வருகிறது.

 இந்த இனிமையான சப்தத்தை கேட்கவே திருவெறும்பூர், பெல், துவாக்குடி போன்ற பகுதியிலிருந்து மக்கள் இந்த குளத்தை சுற்றி நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

 நரிக்குறவர்கள் வேட்டை: இதனிடையே, கடந்த சில நாட்களாக குளத்துக்கு வரும் பறவைகளை இங்குள்ள நரிக்குறவர்கள் வேட்டையாடி வருகின்றனர்.

இதை மாவட்ட நிர்வாகம் தடுத்தி நிறுத்தி குளத்தை ஒரு சுற்றுலா மையமாகவோ அல்லது பறவைகள் சரணாலயமாகவோ அறிவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் குளத்தைச் சுற்றி மின்விளக்குகள் அமைத்தால் அந்தப் பகுதி பூங்காவாக மாறிவிடும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com