ஏப்ரலில் விண்ணில் பாயும் ஜி-சாட் 11 செயற்கைக்கோள்: இஸ்ரோ தலைவர் கை. சிவன்

இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ள ஜி-சாட் 11 செயற்கைக்கோள் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஏப்ரல் மாதம் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கை. சிவன் தெரிவித்தார்.
Updated on
1 min read

இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ள ஜி-சாட் 11 செயற்கைக்கோள் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஏப்ரல் மாதம் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் கை. சிவன் தெரிவித்தார்.
திருச்சிக்கு புதன்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய தொழில்நுட்பத்தில் இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஜி-சாட் 11 செயற்கைக்கோள் 5.7 டன் எடை கொண்டது. இந்தியாவில் உள்ள ஏவுதளங்களில் இருந்து நான்கு டன் மற்றும் அதற்கு சற்றே கூடுதல் எடையுடைய செயற்கைக்கோள்களை மட்டுமே ஏவ முடியும்.  
எனவே, மிகப்பெரிய செயற்கைக்கோளாகவும், அதிக எடை கொண்டதாகவும் உள்ள ஜி-சாட் 11 செயற்கைக்கோளை பிரான்ஸ் நாட்டில் உள்ள கையானா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோளானது ஹைபேண்ட் வசதியுடன், இணையதளத்தை அதிகவேகத்தில் இயங்கச் செய்ய உதவும். இதேபோல, மார்ச் இறுதியில் ஜி-சாட் 6 ஏ செயற்கைக் கோளும் ஏவப்படுகிறது. இது, உயர்-சக்தியுடைய எஸ்-பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும். 
விண்கலத்தின் பணி வாழ்க்கை 10 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்கால செயற்கைக்கோள் அடிப்படையிலான செல்லிடப்பேசி தகவல்தொடர்பு பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கும். 6 மீட்டர் விட்டம் கொண்ட ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது. இது, தொலைத்தொடர்பு மற்றும் மீனவர்களுக்கு உபயோகமாக இருக்கும். 
இதேபோல, ஜிஎஸ்எல்வி மற்றும் ராணுவத்துக்கு பயன்படும் ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோளும் அடுத்தடுத்து செலுத்தப்படவுள்ளது. இவையனைத்துமே மக்கள் பயன்பாட்டுக்கும், மக்களுக்கு சேவை அளிக்கவே உருவாக்கப்பட்டு விண்ணில் அனுப்பப்படுகிறது. 
ஏவு வாகனங்கள் தயாரிப்பு மட்டுமே தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அனைத்து தயாரிப்புகளையும் இஸ்ரோ மூலம் மட்டுமே மேற்கொண்டால் இங்குள்ள குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வேலை என்றாகிவிடும். 
மாறாக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்போது இஸ்ரோவை தவிர்த்த பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்  என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com