குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பழைமையான பொன்மலை சந்தையை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு ? வியாபாரிகள் அதிர்ச்சி

சுமார் 94  ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வரும் திருச்சி பொன்மலை சந்தையை மூட ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை

News image
Updated On :17 ஜூலை 2018, 3:20 am

ஆர். எஸ். கார்த்திகேயன்

சுமார் 94  ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வரும் திருச்சி பொன்மலை சந்தையை மூட ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பே 1924-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது பொன்மலை சந்தை.  பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் குடியிருப்பு வளாகம் சேர்த்து மொத்தம் 998.36 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இடத்தில் நடுவில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வருகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்திலேயே (சுமார் 8 மாவட்டங்கள்) பிரபலமான தானியச்  சந்தை இது. நெல் மற்றும் அரிசி வகைகள் மூட்டைக்கணக்கில்  வணிகம் செய்யப்பட்டு வந்தன. இந்த சந்தையில் பொருள்களை விற்கவும் வாங்கவும், திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர்  பொன்மலைக்கு வந்து செல்கின்றனர்.
94 ஆண்டுகள் பாரம்பரிய சந்தை : தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை சுமார் 94 ஆண்டுகளாக இந்த சந்தைவளாகம் இலவசமாக ரயில்வே துறையால் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இங்கு சுமார் நூற்றுக்கணக்கான கடைகளுடன்  500 க்கும் மேற்பட்ட  வியாபாரிகள் வணிகம் செய்து வருகின்றனர்.  வாரந்தோறும் இயங்கி வரும் சந்தை மட்டுமின்றி  பல கடைகள் வாரம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.  தானியங்கள், காய் கனிகள், மளிகைப் பொருள்களுக்கு இந்த சந்தை மிகவும் பயன்பட்டு வந்தது.  என்றாலும் இங்கு கிடைக்காத பொருள்களே இல்லை என்றே கூறலாம். 
வாடகை நிர்ணயம்: இந்நிலையில், பொன்மலை சந்தையில் உள்ள கடைகளுக்கு தினசரி (தரை) வாடகையை நிர்ணயித்து ரயில்வே நிர்வாகம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.  கடைகளுக்கு ரூ. 20 முதல் 200 வீதமும், மற்றும் வாகனங்களில் வைத்து வியாபாரம் செய்வோருக்கு ரூ. 30 முதல் 500 வரையிலும் தவிர வாகன நிறுத்தக் கட்டணங்களும் அறிவித்துள்ளது . இதற்கு வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வாடகை தர மறுத்துவருவதுடன், ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். 
அதிக கட்டணம் :  இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், 2 தலைமுறையாக குறைந்த பட்சம் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வியாபாரம் செய்து வருகிறோம். எந்த வசதியும் இங்கு இல்லாதநிலையில்,  ரூ.100-க்கு அனைத்து வசதியுடன் வாடைகைக்கு இடம் கிடைக்கிறது. எனவே தரை வாடகை மிகவும் அதிகம்.  தமிழக அரசு நடத்தி வரும் வாரச்சந்தையில் அனைத்து வசதிகளுடன் ரூ.70 மட்டுமே வாடகை என்கின்றனர். அதை ஒப்பிடும் போது இந்த வாடகை அதிகம் என்கின்றனர்.
நிலத்தை ஒப்படைக்க நிர்வாகம் முடிவு: ஆனால் ரயில்வே தரப்பில், பொன்மலை சந்தை வளாகத்தை இலவசமாக விட்டால் மாதம் ரூ. 3 லட்சம் ரயில்வே துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே  குறிப்பிட்டபடி வாடகை தராவிட்டால், நிலத்தை மாநில (மாநகராட்சியிடம்) நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.  வருமானத்தை கணக்கில் கொண்ட ரயில்வே அதிகாரிகள் சிலர், பொன்மலைச் சந்தையை வணிக நோக்கில் நடத்த திட்டமிட்டதன் விளைவு தற்போது, சந்தையையே மூடும் நிலைக்கு சென்றுள்ளது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 
சந்தையை  மூடக்கூடாது  :
சந்தைக்கு வாடகை வசூலிப்பதை தடுக்கும் வகையிலும் அல்லது குறைந்த பட்ச வாடகையை நிர்ணயிக்கும் வகையிலும், சந்தையை மூடாமல் இருக்கவும் திருச்சி மக்களவை உறுப்பினரும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான ப. குமார், ரயில்வே நிர்வாகத்திடம் பேசி வருகிறார். 94 ஆண்டுகள் பழமையான  பொன்மலைச் சந்தையை மூடினால் அதன் மூலம் வாழ்வாதாரம் பெற்ற நூற்றுக்கணக்கான குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சந்தையின்றி அவதிக்குள்ளாக நேரிடும். எனவே அதனை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள். 


ரயில்வே துறையின்  வஞ்சகம்
மதுரை-சென்னை 4 வழிச்சாலைப் பணிகளின் போது பொன்மலை ஜி கார்னர் பகுதியில், ரயில்வே பணிமனை மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கபடவிருந்த  சுரங்கப்பாதை(சப்-வே)க்கு ரயில்வே இடத்தை அப்போதைய விலைக்கு கேட்டும் கூட ரயில்வே நிர்வாகம் இடம் வழங்கவில்லை. இதனால் ஒரு புற இணைப்புச்சாலையை பயன்படுத்த முடியவில்லை. ஒரு பகுதி இணைப்புச்சாலையில்தான் மிகவும் நெரிசலான போக்குவரத்து நடத்து வருகிறது.  அதேபோல அரிஸ்டோ மேம்பால பணிகளையொட்டியும் நிலம் தேவைப்பட்டது.  அதுகுறித்தும் கேட்கப்பட்டபோது நிலம் தராததால் மிகவும் குறுகிய இணைப்புச்சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்மலை சந்தை நிலத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும் என கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி அறிவித்துள்ளார். அப்படியானால் சாலைப்பணிகளுக்கு நிலம் தர மறுத்தது  ரயில்வே துறை அதிகாரிகளின் வஞ்சகமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.