/

கள்ளக்காதலுக்காக கயிற்றால் கழுத்தை இறுக்கி மகன் கொலை: தாய் உள்ளிட்ட இருவர் கைது

கள்ளக்காதல் விவகாரத்தில் மகனை கொலை செய்த, தாய் மற்றும் அவரது தோழி இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். 

Updated On :23 ஜூலை 2018, 8:43 am IST

கள்ளக்காதல் விவகாரத்தில் மகனை கொலை செய்த, தாய் மற்றும் அவரது தோழி இருவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். 
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை சோழங்கபுரத்தைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி  மீனாம்பாள் (40). வீரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து மீனாம்பாள் சாந்தபுரம் பகுதிக்கு குடிமாறி, அங்கு தனது மகன் அங்குராஜூடன் (13) வசித்து வந்தார். அங்குராஜ் சோமரசம்பேட்டை அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு  படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அங்குராஜ் மயங்கி கிடந்ததாக கூறி அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். 
இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அங்குராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்  இறந்து வெகுநேரமாகிவிட்டது என்றனர். இதனையடுத்து உடலை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் சோமரசம்பேட்டை போலீஸாருக்கு, அங்குராஜ் இறப்பில் சந்தேகம் உள்ளதாகசிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சனிக்கிழமை காலை அங்கு சென்ற போலீஸார்அங்குராஜின்  உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் சிறுவன் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சந்தேகத்தில் சிறுவனின் தாயார் மீனாம்பாளிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியானது.
இது குறித்து போலீஸார் கூறியது:  மீனாம்பாள் தனது மகனை திருப்பராய்த்துறை பள்ளியில் சேர்த்துவிட்டு,  தான்மட்டும் வீட்டில் இருந்துள்ளார். கட்டட வேலைக்குச் சென்ற போது இனியானூர் மேலத்தெருவைச் சேர்ந்த முத்தழகு என்ற முத்தையனுக்கும் மீனாம்பாளுக்கும்  இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.  மேலும், முத்தையனிடம் வேலை செய்யும் லட்சுமி என்ற மற்றொரு பெண்ணும் சேர்ந்து மூவரும்,  வேலைக்குச் சென்ற நேரம் போக மீதி நேரத்தில் மீனாம்பாள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். மூவரும் அவ்வப்போது மது போதையில் இருப்பதையும், கள்ளக்காதலர்கள் என்ற விவரம் அக்கம்பக்கத்தில்  தெரியவந்தது.
இந்நிலையில், அங்குராஜ், நிகழாண்டு சோமரசம்பேட்டை பள்ளியில் சேர்ந்து, வீட்டிலேயே தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளான்.  ஒரு நாள் மூவரையும் நேரில் பார்த்த அங்குராஜ் உறவினர்களிடம் தனது தாயாரின் நடவடிக்கை குறித்து கூறி, கண்டிக்குமாறு கூறியுள்ளான். உறவினர்கள் மீனாம்பாளை கண்டித்தனர். ஆனால், தன்னை புகார் கூறிய தனது மகன் மீது மீனாம்பாளுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. எனவே முத்தையன், லட்சுமி, மீனாம்பாள்  மூவரும் சேர்ந்து அங்குராஜை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி வெள்ளிக்கிழமை இரவு பாலில் தூக்க மாத்திரையை கலந்து அங்குராஜூக்கு கொடுத்துள்ளனர். இதையடுத்து  அவன் தூங்கிய பின்னர், மீனாம்பாள், லட்சுமி இருவரும்  நைலான் கயிற்றால் அங்குராஜ் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் முத்தையனுக்கு  தகவல் கூறியதும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறிவிட்டு தலைமறைவானார். பின்னர்தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்ததாக நாடகமாடி வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விவரங்களை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும் முத்தையனை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.