திருச்சி மாவட்ட எல்லைக்குள்பட்ட காவிரிப் படுகையில் நீதிமன்ற வழிகாட்டுதல்களுடன் 13 மணல் குவாரிகள் மிக விரைவில் திறக்கப்படும் என ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: ஆற்றுமணல் எடுப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதையடுத்து மணல் குவாரிகளை திறக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தமட்டில் நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களின்படியே மணல்குவாரிகள் திறக்கப்படும். மாவட்டத்தில் ஏற்கெனவே 13 மணல் குவாரிகள் இயங்கி வந்தன. மீண்டும் அதே 13 மணல் குவாரிகளும் மிகவிரைவில் திறக்க பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு குவாரியானது முழுமையாக அரசு பணிகளுக்காக செயல்படும் வகையில் இயக்கப்படும். செயற்கை மணல் குவாரிகள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்தால், அதற்குரிய ஆய்வுகளை செய்து உரிய பரிசீலனைக்கு பிறகு முறையாக அனுமதி வழங்கப்படும்.
கள்ளிக்குடி மார்க்கெட்: திருச்சி அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடி செலவில் ஒருங்கிணைந்த காய்கனி வளாகம் கட்டப்பட்டு முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடைகள்சிறியதாக இருப்பதாக வியாபாரிகள் கூறியதால் மொத்தம் உள்ள 500 கடைகளும் 250 கடைகளாக மாற்றியமைக்கப்பட்டு ஓரிருநாளில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. மேலும், இந்த மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இந்துசமய அறநிலையத்துறையின் நிலம் 6 ஏக்கர் அளவுக்கு உள்ளது. இந்த இடத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல, மார்கெட்டில் சேகரமாகும் கழிவுகள், குப்பைகளை சேகரிக்க வருவாய்த்துறையின் இடம் 6 ஏக்கரில் உள்ளது. இங்கு இந்த குப்பைகளை சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து பயன்படுத்தவோ, சுகாதாரமுறையில் அகற்றவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காந்தி மார்க்கெட்: காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு மாற்றப்படுவர். ஏனெனில், திருச்சி மாநகரம் தூய்மை நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக காந்தி மார்க்கெட்டை பல்வேறு வசதிகளுடன் கூடிய இடமாக மாற்ற மாநகராட்சிக்கு அவசியம் தேவைப்படுவதால் அதனை எடுத்துக் கொள்ளவுள்ளோம்.
ஒருங்கிணைந்த பேருந்துநிலையம்: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்திடம் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பிறகு ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும்.
குடிநீர்த் தட்டுப்பாடு: திருச்சி மாவட்டத்தில் இப்போதைய நிலவரப்படி குடிநீர்த்தட்டுப்பாடு இல்லை. குக்கிராமங்களில் குடிநீர் விநியோகப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடியால் ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு இருக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாவட்டத்தில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படுமா என்பது குறித்து துறைரீதியாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. தட்டுப்பாடு அபாயம் இருந்தால் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தெரிவித்து அரசிடம் இருந்து நிதி பெற்று தீர்வு காணப்படும்.
அரை வட்ட சுற்றுச் சாலை: திருச்சி மாநகரைச் சுற்றி அரைவட்ட சுற்றுச்சாலை 30 கி.மீ. தொலைவுக்கு அமைப்பதில் 18 கி.மீ. தொலைவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 12 கி.மீ. தொலைவில் நிலம் கையகப்படுத்துவதில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜூன் மாதத்தில் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, விமான நிலையவிரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணியும் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பணிகள் தொடங்கப்படும். திருவானைக்கா ரயில்வே மேம்பால பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. விரைந்து பயன்பாடுக்கு வரும். திருச்சி ரயில்வே சந்திப்பு மேலம்பாலத்தில் பகுதி, பகுதியாக போக்குவரத்துக்குதிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ இடம் தொடர்பாக உரிய அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் அந்தப் பகுதியையும் இணைத்து முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.