10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு திருச்சி மாவட்டத்தில் 380 மையம் தயார்; 1.07 லட்சம் பேர் எழுதுகின்றனர்

எஸ்எஸ்எல்சி மட்டுமல்லாது மேல்நிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை மாவட்டத்தில் நிகழாண்டு 1.07 லட்சம் பேர் தேர்வு
Updated on
2 min read

எஸ்எஸ்எல்சி மட்டுமல்லாது மேல்நிலைப்பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை மாவட்டத்தில் நிகழாண்டு 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக, 380 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, ஆட்சியர் கு.ராசாமணி கூறியது: அரசுத்தேர்வுகள் இயக்குநரகம் நடத்தும் 12ஆம் வகுப்பு தேர்வை 35,430 மாணவ, மாணவிகளும், 11ஆம் வகுப்பு தேர்வை 35,119 மாணவ, மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வை 36,829 மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர். இதற்காக 380 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
41 கைதிகள்: இத்தேர்வில் 41 சிறைக் கைதிகளும் பங்கேற்று தேர்வு எழுதவுள்ளனர். மேலும், 87 மாணவர்களுக்கு உதவியாளராக தேர்வு எழுத தலா ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தாண்டு புதிதாக 10ஆம் வகுப்பு தேர்வுக்கு 10 மையங்களும், 11, 12 ஆம் வகுப்புகளுக்கு தலா 8 மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வுப் பணிகளை கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர்,கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், அறைக்கண்காணிப்பாளர் என்ற நிலையில் 7,800-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைத்தவிர, நிலைப்படை மற்றும் பறக்கும்படையில் மேல்நிலைத்தேர்வுக்கு தலா 250 பேரும், எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 275 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்ளுக்கு முழுமையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். தேர்வு நாள்களில் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தேர்வு மையங்களுக்கு தடையின்றி மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, மின்வாரியம் என அனைத்துதுறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவுள்ளனர். மாணவர்கள் எந்தவித அச்சமின்றி தேர்வு எழுதலாம். 
எச்சரிக்கை அறிவிப்பு: அரசு பொதுத்தேர்வில் தனியார் பள்ளி மையங்களில் மாணவர்களுக்கு உதவியாக முறைகேடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களாக இருந்தாலும், அரசுத்தேர்வு மையங்கள், வினாத்தாள் மையங்களில்இருந்து வினாத்தாள்களை யாரேனும் முறைகேடாக பயன்படுத்தினாலோ, இத்தகைய நடவடிக்கையில் தனியார் ஜெராக்ஸ் கடை நிறுவனங்கள் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமின்றி காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும். தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் பெல்ட், ஷு, காலணி, செல்லிடப்பேசி, எலெக்ட்ரானிக் பொருள்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.

19 "நீட்' பயிற்சி மையங்கள்
12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர், மாணவிகள் மருத்துவ நுழைவுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க மாவட்டத்தில் 19 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தமையங்களில் ஏற்கெனவே 2 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் மையங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் முன்னதாக, பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், வல்லுநர்களுக்கு வழிகாட்டி பயிற்சி நடைபெறும். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்துக்கு திருச்சியில் பயிற்சி வகுப்பு நடைபெறும். மார்ச் 17ஆம் தேதி இந்த பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com