/

திருச்சியில் ரயில், சாலை மறியல், ஆர்ப்பாட்டம்: 450 பேர் கைது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, திருச்சியில் வியாழக்கிழமை பல்வேறு கட்சிகளின் சார்பில் ரயில் மறியல்,

Updated On :25 மே 2018, 2:53 am IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, திருச்சியில் வியாழக்கிழமை பல்வேறு கட்சிகளின் சார்பில் ரயில் மறியல், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதில், 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுக மறியல்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது செய்ததைக் கண்டித்தும், திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகரச் செயலர் அன்பழகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் அருகே பகுதி செயலர் ராம்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் உள்பட மாவட்டம் முழுவதும் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 450-க்கும் மேற்பட்ட திமுக-வினர் கைது செய்யப்பட்டனர்.
காங். ஆர்ப்பாட்டம்: திருச்சி அருணாசலம் மன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக, மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாநில துணைச் செயலர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, நெ.1 டோல்கேட் பகுதியில் வடக்கு மாவட்ட தலைவர் கலை தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல்: மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அமைப்பின் நிறுவனத் தலைவர் பொன்.முருகேசன் தலைமையில் மாவட்டத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட அக்கட்சியினர் 20 பேர் ரயில் நிலையத்துக்குள் புகுந்து ரயில் என்ஜின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ரயில்வே போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.