முடங்கிக் கிடக்கும் அரைவட்ட சுற்றுச்சாலைப் பணி தொடருமா? 6 மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் திருச்சி மாநகரின் அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணி மீண்டும் தொடங்கப்படுமா என 6 மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
Updated on
2 min read

ஐந்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் திருச்சி மாநகரின் அரைவட்டச் சுற்றுச்சாலைப் பணி மீண்டும் தொடங்கப்படுமா என 6 மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலமாக, கடந்த 2014-இல் இதற்கான பணிகள் தொடங்கின.
43 கி.மீ. நீள அரைவட்டச் சுற்றுச்சாலையானது திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் துவாக்குடியில் தொடங்கி மாத்தூர் வழியாக மதுரை சாலை, திண்டுக்கல் சாலை ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று கரூர் செல்லும் சாலையில் உள்ள பெருகமணியில் நிறைவு பெறும்.
இச்சாலைப் பணிகள் நிறைவுற்றால் கனரக வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் திருச்சி மாநகருக்குள் வருவது பெருமளவு குறைந்து விடும்.  இதனால் விபத்துகளும் குறைந்து, போக்குவரத்து நெரிசலும் இல்லாத மாநகராக திருச்சி அமையும். 
மேலும் இச்சுற்றுச்சாலையானது மதுரை, திண்டுக்கல்,புதுக்கோட்டை, தஞ்சாவூர்,கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களையும் இணைப்பதால், இம்மாவட்ட மக்கள் அருகிலுள்ள பிற மாவட்டங்களுக்கு விரைவாக வந்து செல்ல முடியும். 
இம்மாவட்டங்களில் சிறுதொழில்கள் வளர்ச்சியடைவதுடன், பொருளாதார நிலையும் உயரும். மேலும் இப்பகுதிகளின் தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை மதுரைக்கோ அல்லது திருச்சி விமான நிலையத்துக்கோ விரைவாக கொண்டு சேர்க்க முடியும்.
இவ்வாறாக பல வகையிலும் பயன் தரக்கூடிய இச்சுற்றுச்சாலைத் திட்டமானது கடந்த 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. இச்சாலைப் பணி தொடங்கியபோது திருச்சி அருகே பஞ்சப்பூரில் மேம்பாலப் பணிகள் உள்பட அனைத்தும் வேகமாக நடைபெற்றன. இந்நிலையில் இச்சாலை அமையவுள்ள இப்பகுதிகளில் உள்ள ஒரு சில கிராமத்தினர் விளைநிலங்கள் பாழாகிவிடும் என எதிர்ப்புக் குரல் எழுப்பி, நீதிமன்றத்திலும் தடையாணை பெற்றதால் இத்திட்டம் முடங்கியது.
நீதிமன்றத் தடையாணையால்  ஏற்கெனவே இருந்த ஒப்பந்ததாரரின் உரிமமும் தானாகவே காலாவதியானது. மீண்டும் 2 ஆவது முறையாக மறு ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்பட்டு அந்த உரிமமும் காலதாமதம் காரணமாக காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது நீதிமன்றத் தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கேட்டால் , மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து பணிகளைத் தொடங்க அனுமதி வராததே தாமதத்துக்கு காரணம் என்கின்றனர்.
இத்திட்டத்தை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது 6 மாவட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சிறு,குறு தொழில்கள் சங்க கூட்டமைப்பு எனப்படும் டிடிசியா அமைப்பின் தலைவர் என். கனகசபாபதி கூறியது:
தமிழகத்தில் கோவைக்கு அடுத்ததாக திருச்சி அருகே பஞ்சப்பூரில் ரூ.17 கோடியில் 10 ஏக்கரில் டிடிசியா சார்பில், சர்வதேச வர்த்தக மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இம்மையப் பணி முடிந்தால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களை விரைவாக விமான நிலையம் உள்பட பல இடங்களுக்கும் கொண்டு செல்ல அரைவட்டச் சுற்றுச்சாலை  பேருதவியாக இருக்கும்.
போதுமான சாலை வசதி இருந்தால்தான் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் இம்மையத்தில் தொழிற்கூடங்களை  அமைக்க முன்வரும். நீதிமன்றத் தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலை அமைக்கும் பணிகளை செய்வதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் கட்டப்பட்ட மேம்பாலப் பணி பாதியிலேயே நிற்கிறது. அரைவட்டச் சுற்றுச்சாலை பணி நிறைவடைந்தால் இந்தச் சாலையில் உள்ள சிறு,குறு தொழில்கள் அனைத்தும் வளர்ச்சியடைவதுடன் இச்சாலையை இணைக்கும் 6 மாவட்ட மக்களும் பயனடைவர் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com