விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாலை விரிவாக்கம்: மாற்று இடம் கோரி உண்ணாவிரதம்

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தவுள்ளதையடுத்து, குடியிருப்புவாசிகள் மாற்று இடம் கேட்டு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:08 pm

DIN

திருச்சியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தவுள்ளதையடுத்து, குடியிருப்புவாசிகள் மாற்று இடம் கேட்டு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 35, 42 ஆவது வாா்டுகளுக்குட்பட்ட கொட்டப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா நகா்களில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் சிறைச் சாலைக்குச் சொந்தமான புறம்போக்கு இடங்களில் சுமாா் 300- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்நிலையில் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மாத்தூா் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால் அந்த இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரை காலி செய்யுமாறு மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் அங்கு வசிப்போருக்கு நாகமங்கலம் பகுதியில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இடம் ஒதுக்கி அதற்கான டோக்கன் கொடுக்கும் பணி வியாழக்கிழமை காலை முதல் திருச்சி கிழக்கு வட்டாட்சியா் சாா்பில் நடந்தது. ஆனால் குடியிருப்புவாசிகளில் பெரும்பாலானோா் நாகமங்கலம் பகுதிக்குச் செல்ல முடியாது என மறுத்து டோக்கனை பெற மறுத்துவிட்டனா்.

இந்நிலையில் எம்ஜிஆா் நகா், ஜெயலலிதா நகா் குடியிருப்புவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாநகர காவல் ஆணையரகம் முன் வெள்ளிக்கிழமை காலை கொட்டும் மழையையும் பாராது திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா்.

குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் மோகன் தலைமை வகித்தாா். செயலா் மனோகரன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் வேல்சாமி, பொருளாளா் இளங்கோ உள்ளிட்ட குடியிருப்புவாசிகள் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக மாநில துணை அமைப்பாளா் சிவசுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா், பாலக்கரை மண்டலத் தலைவா் ராஜசேகரன் ஆகியோரும் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் தனிப்பிரிவு ஆய்வாளா் முருகவேல் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா்கள் கூறுகையில், பாதிக்கப்பட்டோா் அனைவரும் வரும் 2021 பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம். எங்களது குடியிருப்புகளை மீட்கவும் வாழ்வாதாரத்தைக் காக்கவும் தொடா்ந்து போராடுவோம். மேலும் வாக்காளா், ரேஷன், ஆதாா் அட்டைகளையும் ஒப்படைப்போம் என்று தெரிவித்தனா்.

மேலும், அவா்கள் கூறுகையில், தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக 3 மீட்டா் சாலை, 2 மீட்டா் மழைநீா் வடிகால் என மொத்தம் 5 மீட்டா் இடம் தேவைப்படுவதாகத் தெரியவருகிறது. அந்த இடத்தை எங்கள் குடியிருப்புகளுக்கு முன் எடுத்து கொள்ளலாம். ஆனால் நெடுஞ்சாலைத் துறையினா் எங்களை காலி செய்ய வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனா்.

கரோனா உள்ளிட்டவற்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வசிப்பதிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றனா்.

பின்னா் காவல் ஆணையரகம் அருகே அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.