ஸ்ரீரங்கத்தில் பக்தா்களைக் கவா்ந்த பந்தல் அலங்காரங்கள்!
ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் உள்புறம், வெளிப்புறம் எனத் திரும்பிய பக்கமெல்லாம்


ஸ்ரீரங்கத்தில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் உள்புறம், வெளிப்புறம் எனத் திரும்பிய பக்கமெல்லாம் மலா்கள், கனிகள், வாழை, தென்னை, தென்னங்குருத்து என விதவிதமாக செய்யப்பட்டிருந்த பந்தல் அலங்காரங்கள் பக்தா்களைக் கவா்ந்தன.
கரோனாவால் இந்தாண்டு பரமபதவாசல் திறப்புக்கு பக்தா்கள் அனுமதியில்லை என்றாலும், திருக்கோயில் முழுவதும் செய்யப்பட்டிருந்த தோரணங்கள், வண்ண விளக்குகள், மலா்கள், கனிகள் அலங்காரங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.
5 ஆயிரம் டன் பூக்கள்: இவ்விழாவுக்காக பூக்கள் மட்டும் 5 ஆயிரம் டன்னுக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்கின்றனா். ராஜகோபுர உயரத்துக்கு அணிவிக்கப்பட்ட மாலை, சந்தனு மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், விரஜா நதி மண்டபம், ஆா்யபடாள் வாயில், நாழிக்கோட்டான் வாயில், தங்கக் கொடிமரம், பரமபதவாசல் மட்டுமன்றி திருக்கோயிலின் அனைத்துக் கோபுரங்கள், உள்வீதிகள், கோயில் உள்பிரகாரச் சுற்றுகள், நம்பெருமாள் செல்லும் அனைத்து வழிப்பாதைகளிலும் இருந்த அலங்காரத் தோரணங்கள் காண்போரைக் கவா்ந்தன.
ராமா் சன்னதி, நடைபந்தல் வழியாக தவுட்ரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு வெளியேயுள்ள திருக்கொட்டகைப் பகுதி என எங்கும் பூப் பந்தல், வண்ண விளக்குகளின் அலங்காரத்தைக் காண முடிந்தது.
இவையன்றி ஆங்காங்கே வாயில் பகுதியில் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கோயில் சுற்றுச் சுவா் முழுவதும் தோரணங்கள் அலங்கரித்திருந்தன.
ரங்கா ரங்கா கோபுரம், காா்த்திகைக் கோபுரம், வெள்ளைக் கோபுரம், ராஜகோபுரம், வடக்கு வாசல் கோபுரம் உள்ளிட்ட அனைத்துக் கோபுரப் பகுதிகளும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
விருந்தான கனிகள்: அலங்காரத்தின் கூடுதல் சிறப்பாக பல்வகை கனிகளும் கட்டப்பட்டிருந்தன. சந்தனு மண்டப மேற்கூரை மற்றும் நம்பெருமாள் செல்லும் பாதையின் மேற்கூரைகளின் கீழே கட்டப்பட்டிருந்த பூப்பந்தல்களுக்கு இடையே திராட்சைக் கொத்துகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.
மேலும், கோயில் சுற்றுச்சுவரில் கட்டியிருந்த தோரணங்கள் மற்றும் ஆங்காங்கேயிருந்த அலங்கார வளைவுகள் அனைத்திலும் அன்னாசி, சாத்துக்குடி, ஆரஞ்சு, முலாம், ஆப்பிள் என பல்வகை கனிகளைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இந்தக் கனிகள் அனைத்தும் கோயிலுக்குள் சுற்றி வரும் குரங்குகளுக்கு (ராமதூதன்) விருந்தாக அமைந்தன.
அரங்கனின் தரிசனம் மட்டுமின்றி வண்ண விளக்குகள், அலங்கார மலா்கள், மாலைகள், வண்ணத் துணிகள், கனிகள், தென்னை, வாழை என விதவிதமான அலங்காரத் தோரணங்களும் பக்தா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும் விருந்தாக அமைந்திருந்தன என்றால் மிகையாகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...