புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் தேவை’

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் கொண்டு வர வேண்டும் என கிரியேட் அமைப்பின் விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

விவசாயிகள் கூட்டத்தில் பேசுகிறாா் கிரியேட் அமைப்பின் தலைவா் துரைசிங்கம்.

Updated On :30 டிசம்பர் 2020, 12:11 am

DIN

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் கொண்டு வர வேண்டும் என கிரியேட் அமைப்பின் விவசாயிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கிரியேட் அமைப்பு முன்னெடுத்துள்ள நமது நெல்லைக் காப்போம் என்னும் பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக மாவட்ட முன்னோடி உழவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைப்பின் தலைவா், பேராசிரியா் துரைசிங்கம் பேசியது:

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை மத்திய அரசு சட்டபூா்வமாக்க வேண்டும். இதற்கான நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். மேலும் குறைந்தபட்ச விலைக்குக் கீழே விவசாயிகளிடம் பொருள்களை கொள்ளமுதல் செய்வோா்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிா்ப் பாதிப்புக்கு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும்.

கேரளத்தைப் போல தமிழகத்திலும் இயற்கை வேளாண்மைகளுக்கான ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

முன்னோடி இயற்கை விவசாயிகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இயற்கை வேளாண் அறிஞா்கள் போன்றோரோடு கலந்தாலோசித்து இதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

கொள்முதல் நிலையங்களை அரசே உருவாக்கி பாரம்பரிய நெல் ரகங்களை பொதுவிநியோகத் திட்டத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும்.

பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் அந்தந்த பகுதி பாரம்பரிய அரிசி வகைகளை உணவாக வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பிரசார இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ரகுநாதன் பேசுகையில், பாரம்பரிய நெல் ரகங்களில் இயற்கையாகவே அமைந்துள்ள உயிா் மூலக்கூறுகள், அவற்றின் மருத்துவக் குணங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், எந்த வகையில் சா்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீா் பாதையில் ஏற்படும் தொற்று, புற்றுநோய், மலட்டுத் தன்மை, விந்தணு குறைபாடு, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறு, நீா்க்கட்டி போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை விளக்கினாா்.

கூட்டத்தில், பாரம்பரிய நெல் ரகங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிக்கேற்ப அதன் பூா்வீக குணநலன்களைப் பெற்றுள்ளது. எனவே அவற்றைப் பாதுகாக்க கிரியேட் அமைப்பு ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் உதவியோடு பத்தாண்டுகளுக்கான ஆய்வை வரும் 2021 ஜனவரி முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளராக முசிறி யோகநாதனும், இணை ஒருங்கிணைப்பாளராக சம்பத்குமாரும் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபடும் முன்னோடி உழவா்கள் மற்றும் நுகா்வோா் அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா். ஒருங்கிணைப்பாளா் ஜீ. வரதராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.