

யோக மார்க்கத்தை மனித குலத்துக்குத் தந்த சிவபெருமானின் திருக்கோலங்களுள் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. அறியாமையை நீக்கி, ஞானத்தின் உச்சமாகவும், கலைகளில் தேர்ச்சியையும், யோகத்தையும் அளிக்கும் மூர்த்தியாகவும் இவர் விளங்குகிறார். சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் கல்லால மரத்தடியில் உபதேசம் செய்த ஆதிகுரு இவரே.
பொதுவாக சிவாலயங்களில் கருவறையின் தென்புறச் சுற்றில் வீற்றிருக்கும் இவருக்கு சில இடங்களில் தனி சந்நிதி உண்டு. அப்படிப்பட்ட தலங்களுள் ஒன்று தென்காசி மாவட்டத்தில் புளியறை என்னும் ஊரில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோயில். சிவபெருமான் இங்கு புளிய மரத்தின் பொந்திலிருந்து பக்தர்களுக்குக் காட்சி தந்ததால் இத்தலம் புளியறை என அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் தில்லை நடராஜரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. அதனால் அச்சமடைந்த சிவ பக்தர்கள் அங்கிருந்த நடராஜரின் திருவுருவச்சிலையை எடுத்துக்கொண்டு சேர நாட்டின் எல்லையான இப்பகுதியை அடைந்தனர்.
அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டு ஒரு புளிய மரத்தைச் சுட்டிக்காட்டியது. உடனே சிவபக்தர்கள் அந்த புளிய மரத்தின் பெரிய பொந்தினுள் நடராஜரை வைத்து செடி கொடிகள் கொண்டு மூடி பாதுகாப்பாக வைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
சில நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் அந்த புளியமரம் அடங்கிய தோப்புக்குச் சொந்தக்காரரான சிவ பக்தர் பொந்திலிருந்த நடராஜரைக் கண்டு மகிழ்ந்தார். யாரிடமும் கூறாமல் அவ்வப்போது அவரை வழிபட்டு வந்தார்.
ஆண்டுகள் கடந்தன. சைவம் மீண்டும் செழித்தோங்கத் தொடங்க, தில்லையில் நடராஜர் திருவுருவச் சிலையை மீண்டும் சேர்க்க அவரைத் தேடி பயணமானார்கள் பக்தர்கள். பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு அந்தப் புளிய மரத்தை அடைந்து பொந்தில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டு ஆனந்தமடைந்தனர். பின்னர் அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு தில்லை திரும்பினர் என்று கூறுகிறது இக்கோயில் வரலாறு.
இந்நிலையில் சில நாள்களுக்குப் பிறகு நடராஜரை தரிசிக்க புளிய மரத்துக்குச் சென்ற சிவ பக்தருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பொந்தில் சுவாமியை காணாது அழுது புலம்பினார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. முன்னர் சிலை இருந்த இடத்தில் பிரகாசமான ஒளி தோன்ற, அதன் மத்தியிலிருந்து பூமியைப் பிளந்து கொண்டு சிறிய சிவலிங்கம் ஒன்று தோன்றியது. ஆனந்தத்தில் கை தொழுது வணங்கினார் சிவபக்தர்.
விஷயம் ஊர் முழுக்கப் பரவ, மக்களுடன் சேர மன்னனும் இங்கு வருகை புரிந்தார். சுயம்பாகத் தோன்றிய ஈசனுக்கு அவரால் எழுப்பப்பட்டதுதான் இந்தக் கோயில். இந்த சுயம்பு மூர்த்தமே மூலவர் சதாசிவ மூர்த்தி.
கோயிலுக்கு முன்புறம் சடாமகுடத் தீர்த்தம் உள்ளது. மேடான பகுதியில் கோயில் அமைந்துள்ளது. 27 படிக்கட்டுகள் ஏறிச் சென்று கோயிலை அடையலாம். 27 நட்சத்திரங்கள் இங்கு படிகளாக அமைந்திருப்பதாக ஐதீகம்.
இந்தப்படிகளுக்கு பூஜை செய்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருவருளால் அனைத்து தோஷமும் நீங்கப் பெறலாம்.
கருவறையில் புளியமரப் பொந்தில் இருந்து சுயம்பாக வெளிப்பட்ட சதாசிவ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவருக்கு வலப்புறம் சுவாமி, அம்பாள் உற்சவ மூர்த்தங்களும்; இடப்புறம் நடராஜர் சந்நிதியும் உள்ளன.
அடுத்துள்ள சுவாமி, அம்பாள் திருக்கல்யாண மண்டபத்தைத் தொடர்ந்து இறைவி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் சிவகாமசுந்தரி. சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டால் மணப்பேறு கிட்டும், கல்வி, வேலை வாய்ப்பு நல்லபடியாக அமையும், உடல் ஆரோக்கியம் பலப்படும்.
மூலவர் சதாசிவ மூர்த்திக்கும் நந்தி பகவானுக்கும் இடையில் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ளார் தட்சிணாமூர்த்தி. அவரை பக்தர்கள் தனியாக வலம் வந்து வணங்கலாம். மூலவராக சதாசிவ மூர்த்தி இருந்தாலும், இது தட்சிணாமூர்த்தி கோயில், குரு பகவான் கோயில் என்றே சிறப்பிக்கப்படுகிறது.
இவர் பாதத்தில் ஒரே சதுரக் கல்லில் ஒன்பது ஆவர்த்த பீடம் கட்டங்கள் வடிவில் காணப்படுவது சிறப்பு. குரு பகவானுக்குக் கட்டுப்பட்டு அத்தனை கிரகங்களும் இங்கே இருப்பதாக ஐதீகம். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி} தெய்வானை சமேத சுப்பிரமணியர், பைரவர், சப்த கன்னியர், சந்திரன் உள்ளிட்ட தெய்வங்களை தரிசிக்கலாம். சனிபகவானுக்கும் தனிச் சந்நிதி உள்ளது.
புளியறை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி, தட்சிணாமூர்த்தி திருக்கோயிலுக்கு மார்ச் 25 (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற இருக்கிறது.
தென்காசியிலிருந்து 15 கி.மீ., செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் புளியறை உள்ளது.
- மு.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேளூா் நிலக்கொண்ட பெருமாள் கோயிலில் கன்னட மொழி கல்வெட்டு!

புளியறை சோதனைச் சாவடியில் 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

65 ஆண்டுகளுக்கு பின்னா் புனரமைக்கப்படும் வாழப்பாடி காசி விஸ்வநாதா் கோயில்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

