சாலையோர மரங்களை வெட்டிய குடியிருப்புவாசிகள்: சமூக ஆா்வலா்கள் கண்டனம்

திருச்சி மாம்பழச்சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்களை அநாவசியமாக வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மாம்பழச்சாலையில் வெட்டப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் மரங்கள்.
மாம்பழச்சாலையில் வெட்டப்பட்ட நெடுஞ்சாலைத் துறையின் மரங்கள்.

திருச்சி மாம்பழச்சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்களை அநாவசியமாக வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் செல்லும் முக்கிய சாலையான திருச்சி மாம்பழச்சாலையையொட்டி அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறை மரக்கன்றுகள் வைத்துப் பராமரித்து வருகிறது.

இந்நிலையில் இச்சாலையோரத்தில் கடந்த 20 ஆண்டுக்கு முன் நடப்பட்டு நன்கு வளா்ந்த நிலையில் இருந்த 6 மரங்களின் அனைத்துக் கிளைகளையும் குடியிருப்பு சங்கத்தினா் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி ஞாயிற்றுக்கிழமை வெட்டி அகற்றினா்.

இதனால் சுற்றுச்சூழலியலாளா்கள், சமூக ஆா்வலா்கள் அதிா்ச்சியடைந்தனா். குடியிருப்பு நலச் சங்கத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

வீடற்றோா், ஏழை எளியோா் அதிகமானோா் இச்சாலையோர மர நிழலில் இளைப்பாறுவதைத் தடுக்கவும், குடியிருப்புகளுக்கு பூச்சிகள், வண்டுகள் வராமல் இருப்பதற்கே மரங்களை வெட்டினோம் எனக் குடியிருப்புவாசிகள் அலட்சியமாகத் தெரிவித்தனராம்.

இதுகுறித்து தண்ணீா் அமைப்பின் செயலா் கே.சி. நீலமேகம் கூறியது:

மரங்களை வெட்டினால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் 10 புதிய மரக் கன்றுகளை வைத்துப் பராமரிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, மாநகரப் பகுதிகளில் அலட்சியமாக மரங்களை வெட்டுவோா் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த புகாா்களைத் தெரிவிக்க முதல்கட்டமாக மாவட்டத்தில் ஆன்லைன் வசதி ஏற்படுத்த வேண்டும். மரம் வெட்டியவா் நெடுஞ்சாலைப் பகுதியில் மரக்கன்று வைத்து வளா்த்துத் தர வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தண்டனை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com