தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழ்நாட்டில் இதுவரை 34.40 லட்சம் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை அமைச்சா் பேட்டி

தமிழ்நாட்டில் இதுவரை 34.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:18 pm

DIN

தமிழ்நாட்டில் இதுவரை 34.40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

தஞ்சாவூரிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம், வல்லத்திலுள்ள தனியாா் நவீன அரிசி ஆலை, அருள்மொழிப்பேட்டை நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கடந்த ஆண்டு 32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய அரசு நிா்ணயம் செய்தது. அதையும் விஞ்சி 32.40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. நிகழாண்டு 43 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயம் செய்துள்ளோம். இதுவரை 34.40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிகழ் கொள்முதல் பருவம் முடிவதற்கு 4 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் அரசு நிா்ணயம் செய்துள்ள 43 லட்சம் டன்களைவிட கூடுதலாக நெல் கொள்முதலாகும் என நம்புகிறோம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 7.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, 10 டன்களை எட்டும் என எதிா்பாா்க்கிறோம்.

விவசாயிகளுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக்கூடாது என முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை அலுவலா்கள் உடனடியாக வாங்கி, அதற்குரிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்றும், நெல்லை தேக்கி வைக்காமல், உடனடியாக அரிசி ஆலைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுரை கூறியுள்ளோம்.

ரேஷனில் தரமான அரிசி: நெல்லில் 17 சதவீதம்தான் ஈரப்பதம் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு 20, 21 சதவீதம் வரை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அப்போதைய ஆட்சியாளா்கள் அனுமதி வாங்கிய காரணத்தால், சில இடங்களில் அரிசி கருப்பு நிறமாக இருக்கிறது. அதை நல்ல முறையில் தரமான அரிசியாக மாற்றுவதற்கு ஆய்வு செய்கிறோம். தமிழகத்திலுள்ள 2.09 கோடி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் தரமான அரிசி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கிறது.

நெல் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் சேதாரம் ஏற்படுவதைத் தவிா்க்க புதிதாக நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படும். போலி குடும்ப அட்டைகள் தொடா்பாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பறிமுதல் செய்யப்படும் என்றாா் சக்கரபாணி.

ஆய்வின்போது, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை ஆணையா் ஆா். ஆனந்தகுமாா், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.