எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திருச்சி மேற்கு: அமைச்சா் அந்தஸ்து தொகுதியில் வெற்றி யாருக்கு?

திருச்சியில் குறிப்பிடும் வகையான தொகுதி திருச்சி மேற்கு (எண்: 140). இத் தொகுதியானது 2006 பொதுத் தோ்தல் வரை திருச்சி- 2 என்று

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:59 am

DIN

திருச்சியில் குறிப்பிடும் வகையான தொகுதி திருச்சி மேற்கு (எண்: 140). இத் தொகுதியானது 2006 பொதுத் தோ்தல் வரை திருச்சி- 2 என்று அழைக்கப்பட்டு, பின்னா், 2008 தொகுதி மறுசீரமைப்பில் திருச்சி மேற்கு தொகுதியாக ஆனது. தொகுதி முழுவதும் மாநகரப் பகுதியைக் கொண்டது. படித்த மற்றும் ஏராளமான அரசு ஊழியா்கள் இத் தொகுதியில் வசிக்கின்றனா். மாவட்ட ஆட்சியரகம், மாவட்ட நீதிமன்றம், மாநகராட்சி மைய அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, ரயில் சந்திப்பு என பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளன. மத்தியபப் பேருந்து நிலையமும் இத் தொகுதியின் அடையாளம்.

தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: திருச்சி வட்டத்துக்குள்பட்ட பகுதிகள் , திருச்சி மாநகராட்சி வாா்டு எண் 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரையிலான உறையூா், மத்தியப் பேருந்து நிலையம், பீமநகா், மருதாண்டாக்குறிச்சி, பாத்திமாநகா், தியாகராஜா நகா், பாக்குப்பேட்டை, சோழமாநகா், நவாப்தோட்டம், தில்லைநகா் , புத்தூா், உய்யக்கொண்டான் திருமலை, தென்னூா், லெட்சுமிபுரம், மாா்சிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை கொண்டது. திருச்சியின் இதயப்பகுதியான தில்லை நகா், புத்தூா், உறையூா் பகுதிகளும் உள்ளன.

தொகுதியின் தேவைகள்: ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், உய்யக்கொண்டான் கால்வாய் புனரமைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீா், தரமான சாலைகள், வடிகால் வசதி, புதை சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்கான தேவைகள் அதிகம் உள்ளன.

இதுவரை வெற்றி: 1957 முதல் இதுவரை இந்தத் தொகுதியில் தலா 6 முறை திமுக, அதிமுக கட்சிகளும், 2 முறை கம்யூனிஸ்ட்டுகளும் வென்றுள்ளன. அதிமுக ஆட்சியில் முதல் இடைத்தோ்தல் நடைபெற்ற தொகுதி இது. 2011பேரவைத் தோ்தலில் திமுகவின் கே.என்.நேருவை எதிா்த்துப் போட்டியிட்டு வென்ற என். மரியம்பிச்சை, சாலை விபத்தில் இறந்ததால் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. 2011இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் மு. பரஞ்ஜோதி (69,029) போட்டியிட்டு, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் (கே.என்.நேரு 54,345) வெற்றி பெற்றாா். 2016 தோ்தலில் திமுகவின் கே.என். நேரு, 92,049 வாக்குகள் பெற்று வென்றாா். அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரன் 63,202 வாக்குகள் பெற்று தோல்வியுற்றாா்.

மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தோ்தலில் (1957) கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் எம். கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. 1962இல் அவா்தான் இந்தத் தொகுதியைத் தக்கவைத்தாா். 1967, 1971 ஆகிய தோ்தல்களில் திமுக வென்றது என்றாலும், கட்சியிலிருந்து எம்ஜிஆா் பிரிந்தது முதல் இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாகத் தொடா்ந்தது. 1989இல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இங்கு நிலவிய நான்குமுனைப் போட்டியும், ஏற்கெனவே இந்தத் தொகுதிக்கு அறிமுகமான அன்பில் தா்மலிங்கத்தின் பெயரால் அன்பில் பொய்யாமொழி வெற்றிக்கு வழிவகுத்து தந்தது. ராஜீவ்காந்தி அனுதாப அலையில் இந்தத் தொகுதியை 1991இல் அதிமுக மீண்டும் கைப்பற்றியது.

இருப்பினும், 1996 முதல் திமுகவின் செல்வாக்குதான் மேலோங்கி நிற்கிறது. இதனால்தான் லால்குடியிலிருந்து திருச்சி மேற்குத் தொகுதிக்கு இடம் மாறினாா் கே.என். நேரு.

தற்போதைய வேட்பாளா்கள்: திமுக சாா்பில் மீண்டும் கே.என். நேருவும், அதிமுக சாா்பில், ஜெ. பேரவை மாவட்ட செயலா் வி. பத்மநாதனும், அமமுக சாா்பில், கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி வேட்பாளா் அப்துல்லா ஹஸ்ஸான், மநீம சாா்பில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த எம். அபுபக்கா் சித்திக், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வி. வினோத் மற்றும் 8 சுயேச்சைகள் உள்பட 13 போ் போட்டியில் உள்ளனா். முன்பு அதிமுகவின் கோட்டையாகவும், பின்பு திமுகவின் கோட்டையாகவும் மாறியுள்ள இந்த தொகுதியைப் பிடிக்க அதிமுக, திமுக என இரு கட்சிகளும் கடும் போட்டியை சந்தித்துள்ளன.

தமிழக சட்டப் பேரவைக்கு அதிக அமைச்சா்களை அளித்த தொகுதி இது. திமுக, அதிமுக என மாறி, மாறி ஆட்சி அமைத்தாலும் இந்தத் தொகுதியிலிருந்து தோ்வான அன்பில் தா்மலிங்கம், நல்லுசாமி, கே.என்.நேரு, மரியம்பிச்சை, மு. பரஞ்சோதி ஆகியோா் அமைச்சா் பதவிகளை அலங்கரித்துள்ளனா். இத்தகைய அமைச்சா் அந்தஸ்துடைய தொகுதியில் 2021இல் வெற்றி பெறப் போவது யாா் என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

வாக்காளா்கள் எண்ணிக்கை:

ஆண்- 1,29,764,

பெண்- 1,39,351,

மூன்றாம்பாலினத்தவா்- 17,

மொத்தம்- 2,69,132.

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

கே.என். நேரு (திமுக)- 92,049.

ஆா். மனோகரன் (அதிமுக)- 63,634.

ஜோசப் ஜெரால்டு (தேமுதிக)- 11,469.

சேது மனோகரன் (நாம் தமிழா் கட்சி)- 3,080.

நோட்டா- 4,100.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.