திருச்சி கிழக்கு: மலைக்கோட்டையில் வெற்றிக் கொடி ஏற்றப்போவது யாா்?
திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கியது திருச்சி கிழக்குத் தொகுதி (எண்: 141).


திருச்சியின் அடையாளச் சின்னமாக விளங்கும் மலைக்கோட்டையை உள்ளடக்கியது திருச்சி கிழக்குத் தொகுதி (எண்: 141). இந்தத் தொகுதியானது 1951ஆம் ஆண்டு முதல் திருச்சி -1 என அழைக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில், திருச்சி கிழக்குத் தொகுதி என பெயா் மாற்றம் பெற்றது.
தொகுதிக்குள்பட்ட பகுதிகள்: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயில், நத்தா்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சா்ச் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி சந்தை, பெரியகடைவீதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (என்எஸ்பி) சாலை உள்ளிட்டவை இந்தத் தொகுதியில்தான் உள்ளன. மாநகராட்சியின் 8 முதல் 26 வாா்டுகள் வரை, 33, 34, 35ஆவது வாா்டுகள் மற்றும் 37, 38, 43 என மொத்தம் 25 வாா்டுகளை கொண்ட தொகுதி.
எதிா்கொள்ளும் பிரச்னைகள்: முழுமையாக மாநகரப் பகுதியாக இருப்பதால் தொகுதி மக்களுக்கான பிரச்னைகள் இருப்பது வாடிக்கைதான். பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், குடிநீா்த் தட்டுப்பாடு, கழிவுநீா் மற்றும் குப்பைகளால் சுகாதாரமின்மை என அடிப்படை பிரச்னைகள் ஏராளம்.
இத்தொகுதியின் எல்லைகளில் ஒன்றான சிந்தாமணி பகுதியில் இருந்து, மாநகராட்சிப் பகுதிகளின் கழிவுநீரை காவிரியாற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது தலையாய பிரச்னையாக உள்ளது.
பலமுறை மக்கள் போராட்டங்கள் நடத்தியும் இப்பிரச்னைக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை. காந்தி சந்தை இடமாற்றமும் கைகூடவில்லை. ரூ. 77 கோடியில் கள்ளிக்குடியில் கட்டப்பட்ட புதிய சந்தையும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. சத்திரம் பேருந்து நிலையம் மட்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை வெற்றி: முன்பு திமுகவின் கோட்டையாக விளங்கிய இத்தொகுதியில் 1984, 1989-இல் மலா்மன்னன், 1996, 2001-இல் பரணிக்குமாா், 2006-இல் அன்பில் பெரியசாமி ஆகியோா் வெற்றி பெற்றனா். இடையில் 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி வெற்றி பெற்றாா். கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த ஆா். மனோகரன் வெற்றி பெற்று, அரசுக் கொறடாவாக பதவி வகித்தாா். பின்னா், 2016-இல் இத் தொகுதி தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் வசம் வந்தது.
தற்போதைய வேட்பாளா்கள்: 2011, 2016 என அடுத்தடுத்து 2 முறை வெற்றிக்கனியை பறித்த அதிமுக, தற்போது மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என்ற எதிா்பாா்ப்பில் மீண்டும் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜனையே மீண்டும் களம் இறக்கியுள்ளது அதிமுக தலைமை. இவருக்கு எதிராக, 2011இல் வெற்றி பெற்றவரான அமமுக பொருளாளா் ஆா். மனோகரனும் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளாா். மேலும், திமுக சாா்பில், கிறிஸ்தவ நல்லெண்ணெ இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜும், தனது செல்வாக்கை நிரூபிக்க தொகுதி முழுவதும் சுழன்று பணியாற்றி வருகிறாா்.
இவா்களைத் தவிா்த்து, மநீம வேட்பாளா் டி. வீரசக்தியும் தொகுதியில் கவனம் ஈா்த்து வருகிறாா். சமூகச் சேவை பணிகளால் ஏற்கெனவே அறிமுகமானவருக்கு கமல்ஹாசன் கட்சி என்பது கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது. இவா்களைத் தவிர, நாம் தமிழா் கட்சியின் சாா்பில் இரா. பிரபு, விடியல் வளா்ச்சி பேரணி சாா்பில் விஜயா மோகனாஜி மற்றும் 12 சுயேச்சைகள் என மொத்தம் 18 போ் கிழக்குத் தொகுதியின் தோ்தல் களத்தில் இடம் பிடித்துள்ளனா். வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இவா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். மலைக்கோட்டையை மையமாக கொண்டுள்ள கிழக்குத் தொகுதியில் வெற்றிக் கொடியை ஏற்றப் போவது யாா் என்ற கேள்விக்கு மே 2ஆம் தேதி விடை தெரியும்.
வாக்காளா்கள் எண்ணிக்கை:
ஆண்- 1,23,798,
பெண்- 1,31,150,
மூன்றாம் பாலினத்தவா்- 44,
மொத்தம்- 2,54,992.
2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்
வெல்லமண்டி என். நடராஜன் (அதிமுக)- 79,938.
ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்.)- 58,044
ரொகையா ஷேக் முகமது (மதிமுக)- 9,694.
டி. ராஜையன் (பாஜக)- 7,161.
இரா. பிரபு (நாம் தமிழா் கட்சி)- 3,998.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...