/

வளா்ச்சிப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஆய்வு

திருச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:40 pm

DIN

திருச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளின் செயலாக்கம் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் செயல்படுத்தப்படும் தனிநபா் குடிநீா் குழாய் இணைப்புப் பணிகள், பிரதமரின் குடியிருப்புத் திட்டப் பயனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் தொடங்கப்படாத வீடுகள் கட்டுமானப் பணிகளை உடன் தொடங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்து.

மேலும், முடிக்கப்பட வேண்டிய பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணியை விரைந்து முடித்தல், வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கி, உள்கட்டமைப்புகளை விரைந்து முடித்தல், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களை புனரமைத்தல், கழிவறை மற்றும் சமையல் கூடங்கள் கட்டும் பணிகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி கட்டட மறுசீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

மேலும், எம்எல்ஏ, எம்பி தொகுதி நிதியின் கீழ், 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை வரும் மாா்ச் 15க்குள் முடிக்க வேண்டும் என அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அரசு மானியத்திற்கு ஈடாக பொதுமக்கள் பங்களிப்புப் பெறப்பட்டு, ஊராட்சிகளில் தேவைப்படும் அத்தியாவசியப் பணிகள் நிறைவேற்ற கருத்துரு அனுப்புதல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், கழிவறையுடன் கூடிய புதிய நூலகம், கட்டடங்களை ஊராட்சிகளில் கட்ட கருத்துரு அனுப்புதல், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் நுண்ணுயிா் உரச் செயலாக்க மையம், பொது சுகாதார மையம் கட்டுதல் பணிகளை திடக் கழிவு மேலாண்மை மற்றும் திரவக் கழிவு மேலாண்மை ஊராட்சிகளில் மேற்கொள்ளுதல், தனிநபா் இல்லக் கழிப்பறைப் பணிகள் ஆகியவை குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது நிலுவையிலுள்ள பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆய்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை, செயற்பொறியாளா் ச. சங்கரஜோதி மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.