

திருச்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது திருச்சியிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக அழைத்துச் சென்றது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியது, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்குகளில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள ஜெயக்குமார், திருச்சியில் தங்கியிருந்து திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
கடந்த முறை கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உடன் ஏராளமான அதிமுகவினரும் காவல் நிலையத்தில் திரண்டனர். அப்போது சிலர், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், பரஞ்சோதி, முன்னாள் எம்.பி. குமார் உள்ளிட்ட 10 பேர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், கரோனா காலத்தில் பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது திருச்சியிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, இன்று மூன்றாவது முறையாக கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியபோது, "கட்சித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் வரும் போது தொண்டர்கள் திரள்வது என்பது காலம் காலமாக இருப்பது தான்.
உதயநிதி ஸ்டாலின் நடத்திய விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மட்டும் கரோனா வராதா? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.