திருச்சியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை புறப்பட்டார்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக பிரமுகரை தாக்கியது தொடர்பாக 2 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
திருச்சியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை புறப்பட்டார்

திருச்சி: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக பிரமுகரை தாக்கியது தொடர்பாக 2 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வழக்குகளில், மார்ச் 11 ஆம் தேதி பிணை (ஜாமின்) பெற்ற நிலையில், திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் கண்டோண்ட்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

அதன் அடிப்படையில் கடந்த 2 வார காலமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கிருந்த ஜெயக்குமார் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாட்களில் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு வார காலம் இன்றோடு முடிவடைந்தது. நிபந்தனை ஜாமீன் உத்தரவின்படி, அவர் இதன் பிறகு திங்கள் தோறும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இதனையொட்டி அவர் திருச்சியில் இருந்து இன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அவரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர். மேலும் முன்னாள் அமைச்சர் வேலுமணி, திருச்சி வந்து அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில்,

திருச்சியில் உள்ள அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் காட்டிய அன்பு என்னை திக்கு முக்காடச் செய்தது. என்னை அதிமுக சகோதரர்கள் அன்புடன் மறக்கமுடியாத வகையில் கவனித்தார்கள். 2,14,00,000 பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று வாக்குறுதி அளித்தார்கள். 5 வருடத்திற்கு கொடுக்க வேண்டும் என்றால் அவ்வளவு நிதி நம்மிடம் உள்ளதா? நிதிநிலையை பெருக்குவதற்கு என்ன மாதிரியான வழிமுறைகள் உள்ளது என்பதனை யோசிக்கவே இல்லை. அதற்காக வந்தவுடன் அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் குழு இதுவரை என்ன செய்துள்ளது? எனக் கூறினார்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி என். நடராஜன், ப.குமார், மு.பரஞ்ஜோதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com