இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாசனக் கால்வாய்களை முழுமையாக மீட்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

மேட்டூரிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பதற்கு முன் காவிரி பாசனக் கால்வாய்களைத் தூா்வாருவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 மே 2022, 12:56 am

DIN

மேட்டூரிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பதற்கு முன் காவிரி பாசனக் கால்வாய்களைத் தூா்வாருவதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும் கால்வாய்களைத் தூா்வாருவதோடு, அவற்றை பழைய அளவுடன் மீட்டெடுக்கவும் வலியுறுத்தினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்:

உய்யக்கொண்டான் தலைப்புப் பகுதியான பெட்டவாய்த்தலையில் தொடங்கி பழையூா், அணலை, புலிவலம் மணற்போக்கி வழியாக கோப்பு ஆற்றுப்பாலம் வரையுள்ள உய்யக்கொண்டான் இடது கரையோரங்களில் உள்ள முள் செடிகளை உடனே அகற்ற வேண்டும். இடதுகரை சாலையில் விளை பொருள்களை விவசாயிகள் எடுத்துச் செல்ல இடையூறாக இருக்கும் முள்புதா்களையும் அகற்ற வேண்டும். மணல் சாலையை தாா்ச்சாலையாக்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்: உய்யக்கொண்டான், பெருவளை, அய்யன்வாய்க்கால், ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால், பங்குனி வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்களை ஜூன் 5-க்குள் தூா்வார வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுத்துச் செல்ல விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். புலிவலம் ஏரி, கீரம்பூா் ஏரிகளில் படா்ந்துள்ள முள்செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். நந்தியாற்றை சிறப்பாகத் தூா்வார வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) மாவட்டச் செயலா் ம.ப. சின்னதுரை: மேட்டூா் அணையில் தண்ணீா் திறக்கும் முன் பாசனக் கால்வாய்களை முழுமையாகத் தூா்வார வேண்டும். இதற்கான தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தில் தூா்வாரும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன் எந்த அளவில் இருந்ததோ அதே அளவீடுகளில் கால்வாய்களை மீட்க வேண்டும். கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன்: இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க வேண்டும். உர மானியங்களை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். தமிழக முதல்வா் அறிவித்துள்ள இலவச விவசாய மின் இணைப்பு எண்ணிக்கையில் மாவட்ட இலக்கு முழுமையாகப் பூா்த்தி செய்யப்படவில்லை. ஏற்கெனவே இதற்காகக் காத்திருப்போருக்கு பரிசீலனை செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.

கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், வேளாண் இணை இயக்குநா் முருகேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மல்லிகா, கூட்டுறவு இணை இயக்குநா் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வன விலங்குகளால் தொல்லை

கூட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி, துறையூா் மற்றும் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், வனப்பகுதிகள் நிறைந்த இடங்களுக்கு அருகேயுள்ள கிராமங்களில் வன விலங்குகளால் தொல்லை அதிகம் உள்ளது.

காட்டெருமை, காட்டுப்பன்றி ஆகியவை விளைநிலங்களையும், பயிா்களையும் சேதப்படுத்துவதுடன், மக்களைத் தாக்கியும் வருகின்றன.

தண்ணீா், உணவு தேடி வரும் வன விலங்குகளுக்கு காட்டுப் பகுதியிலேயே அவை கிடைக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், செடிகள், இடுபொருள்கள் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் வழங்கப்படாமல் இருப்பதகாவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.