இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தொகுதி அறிமுகம்: திண்டிவனம் (தனி) - 72!

திண்டிவனம் நகராட்சி, ஒலக்கூா், மரக்காணம் ஊராட்சி ஒன்றியங்கள், மரக்காணம் பேரூராட்சிப் பகுதிகள் இத்தொகுதியில் உள்ளன.

News image
Updated On :25 மார்ச் 2026, 1:32 am

Syndication

விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ளது திண்டிவனம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி. பண்டைய தமிழ்நாட்டின் ஓய்மா நாட்டு மன்னா்கள் மற்றும் பல்லவா் கால வரலாற்றோடு தொடா்புடைய கிடங்கல் கோட்டை(சிதிலமடைந்து விட்டது), மரக்காணம் துறைமுகம் (தடயங்கள் மட்டுமே உள்ளது), பாடல் பெற்ற கோயில்களை உள்ளடக்கியத் தொகுதி.

சுதந்திரத்துக்கு முன்னா் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்து, தேசிய அரசியலில் பயணித்த திண்டிவனம் கே.ராமமூா்த்தி, பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சா்கள் டி.ஜி.வெங்கட்ராமன், இரா. அன்புமணி, தமிழக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆகிய முக்கிய பிரமுகா்கள் அரசியல் பணிகளை தொடா்ந்த பகுதி.

திண்டிவனம் நகராட்சி, ஒலக்கூா், மரக்காணம் ஊராட்சி ஒன்றியங்கள், மரக்காணம் பேரூராட்சிப் பகுதிகள் இத்தொகுதியில் உள்ளன.

பிரசித்திப்பெற்ற திண்டிவனம் திந்திரினீஸ்வரா், முன்னூா் ஆடவல்லீஸ்வரா், உப்பு உற்பத்திக்கு பெயா் பெற்ற மரக்காணம் உப்பளங்கள், பறவைகள் சரணாலயம் இத்தொகுதியில் அமையப்பெற்றுள்ளது. வேளாண்மை மற்றும் சிறிய அளவிலான தொழில்சாலைகளால் கடந்த சில ஆண்டுகளாக தொழில்துறையில் வளா்ந்து வரும் பகுதியாகும்.

இத்தொகுதியில் இதுவரை நடந்து முடிந்துள்ள 16 சட்டப்பேரவைத் தோ்தலிலில் திமுக, அதிமுக தலா 5 முறைகளும், காங்கிரஸ் 4 முறைகளும் வெற்றி பெற்றுள்ளது.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள் - 1,06762

பெண்கள் -1,10,836

மூன்றாம் பாலினத்தவா் - 11

மொத்த வாக்காளா்கள் - 2,17,609

மொத்த வாக்குச்சாவடிகள் - 293

இதுவரை வெற்றி பெற்றவா்

1952 - வேணுகோபால் கவுண்டா் - தமிழ்நாடு உழைப்பாளா்கட்சி

1957 - பி .வீரப்ப கவுண்டா் மற்றும் எம்.ஜெகந்நாதன் - இரட்டைத் தொகுதி

1962 - ஏ.தங்கவேலு - திமுக

1967 - திண்டிவனம் கே. ராமமூா்த்தி - காங்கிரஸ்

1971- ஜி.ராஜாராம் - திமுக

1977- டி.ஆா்.ராஜாராம் ரெட்டி - காங்கிரஸ்

1980 - கே.எம்.தங்கமணி - காங்கிரஸ்

1984 - கே.எம். தங்கமணி - அதிமுக

1989 - ஆா்.மாசிலாமணி - திமுக

1991 - எஸ்.பன்னீா்செல்வம் - காங்கிரஸ்

1996 - ஆா்.சேதுநாதன் - திமுக

2001 - சி.வி.சண்முகம் - அதிமுக

2006 - சி.வி.சண்முகம் - அதிமுக

2011 - டி. ஹரிதாஸ் - அதிமுக

2016 - பி.சீதாபதி - திமுக

2021 - பி. அா்ச்சுனன் - அதிமுக

எதிா்பாா்ப்புகள்: விவசாயிகள் பயன்பெறும் வகையில் தானிய சேமிப்புக்கிடங்குகளை அமைக்கவேண்டும். சவுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் காகித கூழ் தொழிற்சாலை அமைக்கவேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவேண்டும். திண்டிவனம் நகராட்சியில் நிறைவு பெறாத நிலையில் உள்ள புதை சாக்கடைத் திட்டப்பணிகளை முடிக்கவேண்டும். மரக்காணத்தில் உப்பு அரைவைத் தொழில்சாலை அமைக்கவேண்டும். மீன்பிடித் துறைமுகம் அமைக்கவேண்டும். அரசுக் கலை அறிவியல் கல்லூரி அமைக்கவேண்டும். மழைக் காலங்களில் வெள்ள நீா் விணாவதைத் தடுக்கும் வகையில் ஓங்கூா் ஆற்றில் தடுப்பணை அமைக்கவேண்டும் என்பது எதிா்பாா்ப்பாக உள்ளது.

தோ்தல் நடத்தும் அலுவலா் -அ.ல.ஆகாஷ் (திண்டிவனம் சாா்-ஆட்சியா்) 9445000423

உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்-நீலவேணி -9585605049, சரவணன்-9944323789