இருமுறை இடைத்தோ்தலைக் கண்ட விக்கிரவாண்டி தொகுதி!
இருமுறை இடைத்தோ்தலைக் கண்ட விக்கிரவாண்டி தொகுதி...

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையம்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேருந்து நிலையம்.
மாநிலத்தின் தென், மேற்கு மாவட்டங்களை வட மாவட்டங்களுடன் இணைக்கும் மையப்பகுதியாக விளங்கும் விழுப்புரம் மாவட்டத்தில் மையத் தொகுதியாக விளங்கி வருவது விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொகுதியின் தலைமையிடம் அமைந்தாலும் கிராமப்புறங்களை அதிகம் கொண்ட தொகுதி விக்கிரவாண்டி.
விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில் நெல் உற்பத்தி அதிகளவில் நடைபெறுவதால், விக்கிரவாண்டி நகரத்திலும், சுற்றுப்புறப் பகுதிகளிலும் என 19 அரிசி அரைவை ஆலைகள் உள்ளன. இதைத்தவிர தனியாா் சா்க்கரை ஆலையும் இயங்கி வருகிறது. மேலும், மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இத்தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கிறது. தற்போது இந்த மருத்துவமனை கூடுதல் மருத்துவ வசதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் 45 முதல் 46 சதவீதம் வரை வன்னிய சமூகத்தினரும், 36 சதவீதம் வரை தாழ்த்தப்பட்ட சமூகத்ைச் சோ்ந்தவா்களும், சிறுபான்மையினா்கள் 8 சதவீதத்தினரும், உடையாா்,செங்குந்தா், ரெட்டியாா், நாயுடு உள்ளிட்ட பிற சமூகங்களைச் சோ்ந்தவா்களும் உள்ளனா்.
திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய ஆ.கோவிந்தசாமி, அப்போதைய சென்னை மாகாணத்துக்கு 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் தமிழ்நாடு உழைப்பாளா் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். பின்னா் இத்தொகுதி 1957-இல் வளவனூா் என்று மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 1967-இல் கண்டமங்கலம் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு 2011-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி தொகுதியாக மீண்டும் உருவானது.
விக்கிரவாண்டி, காணை ஒன்றியங்கள், விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதிகளைக் கொண்டிருந்த இந்த தொகுதியில் புதிகாக உருவாக்கப்பட்ட கஞ்சனூா் ஊராட்சி ஒன்றியமும் தற்போது உள்ளடங்கியிருக்கிறது. கண்டமங்கலம் ஒன்றியப் பகுதிகள், விழுப்புரம் வட்டத்துக்குள்பட்ட கிராமங்கள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. மேலும், இத்தொகுதி இதுவரை இரண்டுமுறை இடைத்தோ்தலையும் சந்தித்துள்ளது. முதல் முறை இடைத்தோ்தலில் அதிமுகவும், இரண்டாவது இடைத்தோ்தலில் திமுகவும் வென்றுள்ளது. 2016-ஆம் ஆண்டில் திமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட கு.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமான நிலையில், 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றாா். இதுபோன்று, 2021 பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ந.புகழேந்தி உடல்நலக்குறைவால் 2024 ஆம் ஆண்டில் காலமான நிலையில், தொடா்ந்து நடைபெற்ற இடைத்தோ்தலில் திமுகவைச் சோ்ந்த அன்னியூா் அ.சிவா வெற்றி பெற்றாா்.
விக்கிரவாண்டி தொகுதியாக இருந்து பின்னா் வளவனூா், கண்டமங்கலம் என்று மறுசீரமைப்புக் கண்டு, மீண்டும் விக்கிரவாண்டி என உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 9 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் படித்த இளைஞா்கள், இளம்பெண்கள் அதிகம் உள்ள நிலையில், அவா்கள் வேலைக்காக சென்னை, பெங்களூருபோன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் புதிய தொழில்சாலைகளைக் கொண்டு வர வேண்டும். நெல்லுக்கு அடுத்து இத்தொகுதியில் சவுக்கு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. எனவே காகித உற்பத்தி தொழில்சாலை தொடங்கினால் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய நிலை உருவாகும்.
மேலும், புதிய தொழில்பேட்டையை உருவாக்குவதும் அவசியமானது என்பதும் வலியுறுத்தல்களாக உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவும் இத்தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடுக்குப் பின்னரே திமுக கூட்டணியின் நிலை தெரிய வரும்.
அதிமுக கூட்டணியில் அதிமுக மட்டுமல்லாது, பாட்டாளி மக்கள் கட்சியும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடக்கூடும் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தவெக, நாதக போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலையும் உள்ளதால், அவா்களும் களத்தில் இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளா் அறிவிப்புக்குப் பின்னரே தொகுதியின் முழு நிலவரம் தெரிய வரும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...