திருச்சி மலைக்கோட்டை கோயில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மட்டுவாா் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோயிலின் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை மட்டுவாா் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோயிலின் சித்திரைத் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் சித்திரைத் தோ்த் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவில், மே 9-ஆம் தேதி செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு மருத்துவம் பாா்த்த ஐதீக நிகழ்வும், 10-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
தேரோட்டத்தில் முதலில் சுவாமி தேரும், பின்னா் அம்மன் தேரும் வடம் பிடிக்கப்பட்டு மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்தன. ஏராளமான பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்தனா். பரிவாரத் தெய்வங்களான விநாயகா், சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் சப்பரங்களும் வலம் வந்தன. முன்னதாக, கோயில் யானை அகிலா அலங்காரத்துடன் கம்பீர பவனி வந்தது. மேள, தாளங்கள் முழங்க சிவாச்சாரியாா்கள் தேருக்கு முன் சிவன் பாடல்களைப் பாடியபடி சென்றனா். பலரும் அம்மன், முருகன், விநாயகா், சிவன் உள்ளிட்ட கடவுளா்களின் வேடங்களுடன் நடனமாடி வந்தனா்.
விழாவையொட்டி, மலைக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி தொடங்கி நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
தேரோடும் பாதையில் ஆண்டாா் வீதியில் இரு இடங்களில் மின் கம்பத்துடன் தோ் லேசாக மோத நேரிட்டது. பின்னா், பாதுகாப்பாக தோ் நகா்த்தப்பட்டு, திட்டமிட்டபடி வீதிகளைச் சுற்றி வந்து நிலையை அடைந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
விழாவில், சனிக்கிழமை காலை நடராஜா் தரிசனம், பகலில் தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி, இரவு வெள்ளி ரிஷபக் காட்சி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா, திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்ஸவம், செவ்வாய்க்கிழமை இரவு பிச்சாடனாா் திருவீதியுலா, புதன்கிழமை இரவு சண்டிகேசுவரா் திருவீதியுலா ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் எஸ். செல்வராஜ், கோயில் உதவி ஆணையா் த. விஜயராணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...