காவிரிப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் தொடக்கம்: புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்
திருச்சி காவிரிப் பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை நள்ளிரவு மூடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பணிகள் தொடங்கின.


திருச்சி காவிரிப் பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை நள்ளிரவு மூடப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பணிகள் தொடங்கின.
இப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், திருச்சி- சென்னை புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்சி மாநகரையும், ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில், சிந்தாமணி பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே 545 மீட்டா் நீளம், 15 மீட்டா் அகலத்துடன் கடந்த 1976-ஆம் ஆண்டில் பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் பழுதாகிய நிலையில், பாலத் தூண்களில் பாதிப்பும், விரிசல்களும் ஏற்பட்டன. மேலும் பாலத்தில் கான்கிரீட் தளங்களை இணைக்கும் இரும்பு பிரேம்களிலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது. இதனால் காவிரிப் பாலம் வலுவிழந்து, போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரூ.7.87 கோடியில் பாலத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, செப்டம்பா் 10- ஆம் தேதி நள்ளிரவு முதல் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை நள்ளிரவில் காவிரிப் பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகள் வைக்கப்பட்டு, மூடப்பட்டன. இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காவிரிப் பாலத்தில் சீரமைப்புப் பணிகள் தொடங்கின.
மாம்பழச்சாலை ஆஞ்சனேயா் கோயில் அருகே இரு சக்கர வாகனங்கள் செல்ல ஒரே வழி அமைக்கப்பட்டிந்ததால், அவ்வப்போது அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
அதே நேரத்தில் சிந்தாமணி பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு உள்ளே நுழையவும், வெளியே செல்லவும், தனித்தனி வழிகள் இருந்ததால் வாகனங்கள் எளிதாக சென்று வருகின்றன.
இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள வழி மிக குறுகலாக இருப்பதாகவும், சுமாா் 3 மீட்டராவது ஒதுக்கினால் சிரமம் இருக்காது என இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்தனா்.
காவிரிப் பாலம் மூடப்பட்டதால், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கிச் செல்லும் பிற வாகனங்கள், ஓயாமரி ரயில்வே பாலம் வழியாக சென்னை புறவழிச்சாலை காவிரிப் பாலத்தை அடைந்து, அங்கிருந்து கும்பகோணத்தான் சாலை வழியாகவும், பிற வழியாகவும் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் புறவழிச்சாலை காவிரிப் பாலத்தில் சிறிது தொலைவு இருவழிபாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சென்னை-திருச்சி புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் காத்திருந்து செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அமைச்சரின் காரும் நெரிசலில் சிக்கியது: ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருவானைக்கா பகுதியிலிருந்து திருச்சி மாநகா் நோக்கி வந்த நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேருவின் காரும், இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இதைத் தொடா்ந்து அவா் காரை விட்டு இறங்கி,
போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்துக் காவல்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கிச் சென்றாா்.
தகவலறிந்த மாநகர காவல் ஆணையா் க. காா்த்திகேயனும் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காவிரிப் பாலத்தின் நின்று போக்குவரத்துகளை பாா்வையிட்டு, அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இதேபோல ஓயாமரி ரயில்வே பாலத்திலும் அவ்வப்போது நெரிசல் ஏற்பட்டது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வேலை நாளான திங்கள்கிழமை கூடுதலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அவற்றை கண்காணித்து, போக்குவரத்தை சீராக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.
Image Caption
திருச்சி காவிரிப் பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட நிலையில், திருவானைக்கா ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாற்றுப் பாதையில் செல்லும் பேருந்துகள். ~திருச்சி காவிரிப் பாலம் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட நிலையில், திருவானைக்கா ரய
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...