

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் திங்கள்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து உற்சவத்துக்குப் பிறகு, வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பானது இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
திருப்பள்ளியெழுச்சிக்குப் பிறகு நம்பெருமாள், ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் சிம்ம கதியில் புறப்பட்டார். ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், தங்கக்கொடிமரம், குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபம் வழியாக, பரமபதவாசலை நம்பெருமாள் வந்தடைந்ததும், ஸ்தானீகர் கட்டியம் கூற சரியாக அதிகாலை காலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் புடைசூழ கோவிந்தா. கோவிந்தா என்ற பக்தி முழக்கங்களுக்கிடையே பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்தார் நம்பெருமாள். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பரமபதவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பரமபதவாசல் திறப்பு நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.