சூரியூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: அடக்க முயன்ற காளையர்கள்
திருச்சி, சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அதனை அடக்க இளைஞர் பட்டாளம் களம் இறங்கியிருந்தனர்.


திருச்சி: திருச்சி, சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அதனை அடக்க இளைஞர் பட்டாளம் களம் இறங்கியிருந்தனர். சில காளைகள் அடங்காமல், சுற்றியிருந்த வீரர்களுக்கு சுழன்று சுழன்று கெத்து காட்டின.
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஆண்டுதோறும் நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவையொட்டி மாட்டு பொங்கல் தினத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
இதையும் படிக்க.. பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் 9 காளைகளை அடக்கிய இளைஞர் பலி
இதற்காக சூரியூர் பெரியகுளத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான காலரி வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
இன்று அதிகாலை முதல் காளைகள் மைதானத்துக்கு வரத்தொடங்கின. கால்நடைத்துறை இணை இயக்குனர் மருதைராஜ் தலைமையிலான குழுவினர் காளைகளை பரிசோதித்து தகுதியான காளைகளை போட்டிக்கு தேர்வு செய்தனர். மருத்துவர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழுவினர் வீரர்களின் உடல் தகுதியை சோதித்து,வீரர்கள் போதை பொருள் பயன்படுத்தி உள்ளார்களா என ஆய்வும் மேற்கொண்டு தகுதியான வீரர்களை போட்டிக்கு அனுமதித்தனர்.
சீறிப் பாய்ந்த காளைகள்
காலை தொடங்கிய போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப்குமார் தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் போட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
காளைகளை அடக்க சுமார் 400 வீரர்கள் களத்தில் இறங்கினர். முதலில் மஞ்சள் டீ சர்ட் அணிந்த காளையர்கள் மைதானத்தில் இறங்கி காளைகளை அடக்கினர். போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. வெற்றி பெறும் வீரருக்கு முதல் பரிசாக இரு சக்கர வாகனமும், 2ம் பரிசாக குளிர்சாதன பெட்டியும் வழங்கப்பட்டது.
இது தவிர கட்டில், நாற்காலி, ரொக்கப்பரிசு, உள்ளிட்ட பரிசுகளும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.
முதல் சுற்றுவரை 108 காளைகள் விடப்பட்டது. இதில் ஒரு காளையின் உரிமையாளர் காயமடைந்தார். சில காளைகள் மைதானத்தில் சுற்றி நின்ற வீரர்களுக்கு சுழன்று சுழன்று கெத்து காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை காண 5 ஆயிரம் மக்கள் திரண்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கைகலப்பு, தடியடி
முதல் சுற்றுப் போட்டி 9 மணி அளவில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து 2ம் சுற்றுப்போட்டி தொடங்கியது. அப்போது ஒரு சிறிய காளை வாடிவாசல் வழியாக விடப்பட்டது. அந்த காளையை 5க்கும் மேற்பட்ட வீரர்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காளை சிறிய கன்றாக இருப்பதால் ஒரு வீரர் மட்டுமே பிடிக்க வேண்டும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர்.
அந்த காளையின் உரிமையாளரும் மைதானத்தில் வந்து ஒருவர் மட்டும் பிடிக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து வீரர்களுக்கும், உரிமையாளருக்கும் வாக்குவாதமும், தொடர்ந்து இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பும் ஏற்பட்டது. போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து விரட்டினர்.
அதுபோல காளைகள் கொண்டு வந்து நிறுத்தும் இடத்திலும் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...