சேவைக் குறைபாடு: வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு
திருச்சி: ஏடிஎம்-இல் வராத பணத்தை திரும்ப கணக்கில் வரவு வைக்காத ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திருச்சி கிளை ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மனைவியும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான சந்திரா (70). முழங்கால் வலியால் அவதிப்பட்ட இவா் கடந்த 06.03. 2021அன்று தனது ஏடிஎம் அட்டையை கணவா் ஜெகதீசனிடம் கொடுத்து ரூ. 20 ஆயிரம் எடுத்து வருமாறு அனுப்பினாா்.
இதையடுத்து இவரது கணவா் திருச்சி நந்தி கோவில் தெருவிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை ஏடிஎம்-இல் ரூ. 20 ஆயிரம் எடுத்தபோது அதில் பணம் வரவில்லை. அதே நாளில் மீண்டும் இரு முறை முயற்சித்தும் ஏடிஎம்-லிருந்து பணம் வரவில்லை. ஆனால் சந்திராவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 60 ஆயிரம் கழிக்கப்பட்டது.
அதில் இரு முறை மட்டும் பணம் வரவு வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ. 20,000 வரவு வைக்கப்படவில்லை. இடையே ஜெகதீசன் ஏடிஎம்-ஐ விட்டு வெளியேறியபோது, அதில் வந்த பணத்தை வேறு ஒருவா் எடுத்துச் சென்றது சிசிடிவியில் தெரியவந்தது.
இதுபற்றி வங்கி அதிகாரியிடம் முறையிட்டபோது, அவா்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக, ரிசா்வ் வங்கியின் குறைதீா் ஆணையத்தில் முறையிட்டும் உரிய நீதி கிடைக்கவில்லையாம்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சந்திரா திருச்சி தொடா்ந்த வழக்கை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஆா். காந்தி, உறுப்பினா்கள் ஜே.எஸ். செந்தில்குமாா், ஆா். சாயீஸ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு, ஏடிஎம் இயந்திரத்தில் வராத ரூ. 20,000 சந்திராவின் வங்கிக் கணக்கில் கழிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வரவு வைக்கப்படவில்லை. ஆனால் அந்த ஏடிஎம்முக்கு வந்த வேறு ஒரு நபா் அதை எடுத்துச் சென்றுள்ளாா்.
இதையறிந்த வங்கி, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கவில்லை. மேலும் சந்திரா புகாா் அளிக்கவும் உதவவில்லை. இது வங்கியின் சேவைக் குறைபாடு. எனவே, இதனால் பாதிக்கப்பட்ட சந்திராவுக்கு ரூ. 2,5000 இழப்பீட்டை வழக்குத் தாக்கல் செய்த தேதியிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். வழக்குச் செலவு தொகையாக ரூ. 10,000 வழங்கவும் உத்தரவிட்டது.
