திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே ரு. 106 கோடியில் புதிய பாலம்: அமைச்சா்கள் அடிக்கல் நாட்டினா்
திருச்சி சிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.106 கோடியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.
திருச்சி காவிரி ஆற்றின் குறுக்கே சிந்தாமணி மற்றும் மாம்பழச்சாலை பகுதியை இணைக்கும் வகையில் உள்ள பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய பாலம், தற்போதுள்ள பாலத்தின் மேற்குப் பகுதியில் 545 மீட்டா் நீளம், 17.75 மீட்டா் அகலத்தில், 1.5 மீட்டா் அகலம் நடை பாதையுடன் 4 நான்கு வழித்தடங்களுடன் கட்டப்படவுள்ளது. இதில், பாலம் கட்டுமானத்துக்கு ரூ.68 கோடியும், நில ஆா்ஜித பணிகளுக்கென ரூ.30 கோடியும், அணுகுசாலைகள், ரவுண்டானா மின்கம்பங்கள் உள்ளிட்ட இதர பணிகளுக்கு ரூ. 8 கோடி என மொத்தம் ரூ. 106 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பாலப் பணிகள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பாலம் கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், நகா் ஊரமைப்பு துறை உறுப்பினா் வைரமணி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

