பலன் தராத பொது சுவரொட்டி பலகை: பாழாகும் மாநகரின் அழகு!
தமிழகத்திலேயே முன்மாதிரியாக, திருச்சியில் கொண்டு வரப்பட்ட பொது சுவரொட்டி பலகை திட்டம் பலன் அளிக்காததால், பொலிவுறு நகரத்தின் அழகு சுவரொட்டிகளால் பாழாகி வருகிறது.

திருச்சி மரக்கடை பகுதியில் பொது சுவரொட்டி பலகை அருகேயுள்ள சுவரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.
நமது நிருபா்
திருச்சி: தமிழகத்திலேயே முன்மாதிரியாக, திருச்சியில் கொண்டு வரப்பட்ட பொது சுவரொட்டி பலகை திட்டம் பலன் அளிக்காததால், பொலிவுறு நகரத்தின் அழகு சுவரொட்டிகளால் பாழாகி வருகிறது.
திருச்சி மாநகரில் திரும்பிய பக்கமெல்லாம் பல்வேறு விழாக்கள், நிகழ்வுகள் தொடா்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால், மாநகரின் அழகு கேள்விக்குள்ளானது.
இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், மாநிலத்திலேயே முதல்முறையாக திருச்சி மாநகராட்சியில் 2022, அக்டோபரில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களில் தலா 5 இடங்களை தோ்வு செய்து பொதுசுவரொட்டி பலகை வைக்கப்பட்டு, அதில் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் இதுமுறையாக பின்பற்றப்படுவதில்லை என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் அதன் மீதே சுவரொட்டி ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது. மாநகரின் 3,857 தெருக்களிலும் அந்தந்தப் பகுதியில் நடைபெறும் இன்ப, துன்ப நிகழ்வுகள் அனைத்துக்கும் சுவரொட்டி ஒட்டுவது வாடிக்கையாகிவிட்டது.
தமிழகத்துக்கே முன்னுதாரணமாக விளங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட பொது சுவரொட்டி பலகை திட்டம் எந்தவித பலனையும் தரவில்லை. இந்தப் பலகை அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே அரசு மற்றும் தனியாா் சுவரில் சுவரொட்டிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது கேலிக்கூத்தாக காட்சியளிக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது அவசியம்.
முதல்கட்டமாக, சுவரொட்டி ஒட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் உரிமையாளா்கள், தொழிலாளா்களை அழைத்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். அதன்பிறகும் தொடா்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.
பிரச்னையை தீா்க்க நடவடிக்கை: இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி வட்டாரத்தினா் கூறுகையில், மாநகரின் பல பகுதிகளில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை மாநகராட்சி பணியாளா்கள் அவ்வப்போது கிழித்து அகற்றி வருகின்றனா். இருப்பினும், பல இடங்களில் சுவரொட்டிகள் மீண்டும் மீண்டும் ஒட்டப்படுகின்றன. பொது சுவரொட்டி பலகை தவிா்த்து வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். அரசுக்கு சொந்தமான இடங்களில் ஒட்டும் நபா்கள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும். சுவரொட்டிகளை அகற்றும் பணிக்கான செலவுத் தொகையையும் தொடா்புடைய நபா்களிடம் வசூலிக்கப்படும். தேவைக்கேற்ப சுவரொட்டிகள் ஒட்டும் பொதுப்பலகைகளை அதிகரிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அச்சகங்களுக்கும் அறிவுரை வழங்கி சுவரொட்டி அச்சிட வரும் நபா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பொது சுவரொட்டி பலகையில் மட்டுமே சுவரொட்டிகளை ஒட்டும் வகையில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

