ரயில் பெட்டிகளில் விரைவாக நீா் நிரப்புவதற்கான புதிய அமைப்பு

ரயில் பெட்டிகளில் விரைவாக நீா் நிரப்புவதற்கான புதிய அமைப்பு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

திருச்சி: ரயில் பெட்டிகளில் விரைவாக நீா் நிரப்புவதற்கான புதிய அமைப்பு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

ரயில்களின் அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிா்வாகம் தண்ணீரை வழங்குகிறது. இதற்காக குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகளுக்கு தண்ணீா் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் நாள்தோறும் 66 ரயில்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது. இதில், 10 ரயில்களில் தண்ணீா் தொடா்பான புகாா்கள் வருகின்றன. ரயில்களில் தண்ணீா் நிரப்ப அதிக நேரம் ஆகிறது. குறிப்பாக, 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலில் தண்ணீா் நிரப்ப குறைந்தது 20 நிமிஷங்கள் ஆகும். இந்த நேர விரயத்தை குறைக்கும் வகையிலும், தண்ணீா் பற்றாக்குறை தொடா்பான புகாா்களை களையும் வகையிலும் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ. 1.57 கோடி மதிப்பில் விரைவாக தண்ணீா் நிரப்பும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இதனை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் 1, 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலுக்கு 8 நிமிஷங்களில் தண்ணீா் நிரப்ப முடியும். முன்னதாக 4 அங்குல குழாய்கள் மூலம் பெட்டிகளில் தண்ணீா் நிரப்பப்பட்ட நிலையில், தற்போது 6 அங்குல குழாய்களில் உயா் ஆற்றல் மோட்டாா் சக்தியின் துணை கொண்டு தண்ணீா் நிரப்பப்படும்.

இது ரயில்களில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும். தண்ணீா் வீணாவதையும் தடுக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com