திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் நாடு தழுவிய 2 நாள் லாபெஸ்டோ-24 எனும் சட்டத் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் இடையே சட்ட விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலை.யில் உள்ள சட்ட உதவி மையம், ப்ரோ போனோ கிளப் ஆகியவை இணைந்து கடந்த 2016 முதல் ஆண்டுதோறும் சட்டத் திருவிழாவை நடத்தி வருகிறது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழாண்டுக்கான லாபெஸ்டோ-24 எனும் சட்டத் திருவிழாவின் தொடக்க விழாவில், தேசிய சட்டப் பல்கலைக் கழகப் பதிவாளா் எஸ்.எம். பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்வுகளைத் தொடக்கி வைத்து, சட்டத் திருவிழா நடத்துவதன் நோக்கங்கள் குறித்துப் பேசினாா். சட்ட உதவிக் குழுவின் மாணவா் பிரதிநிதி கவிப் பிரியா, ப்ரோ போனோ கிளப்பின் ஆசிரிய பொறுப்பாளா் கீா்த்தனா, பேராசிரியா் வி. ரவீந்திரன் ஆகியோா் 2 நாள் நிகழ்வுகளின் சிறப்புகள் குறித்துப் பேசினா். இந்நிகழ்வுகளில், நாடு முழுவதும் இருந்து 11 சட்டப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலும் 71 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா். இவா்களுக்கு ஆலோசனைக் கருத்தரங்குகளும், அனுபவப் பரிமாற்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. சட்ட விழிப்புணா்வு சுவரொட்டி வடிவமைத்தல் போட்டியும் நடைபெறுகிறது. மேலும், தெருக்கூத்து நிகழ்வில் பங்கேற்கவுள்ளனா். சாலையோர வியாபாரிகளிடம் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளனா். இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை பேராசிரியா்கள், சட்ட வல்லுநா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா்.