எலமனூா் பாலத்துக்கு விமோசனம் எப்போது?
எலமனூரில் சிதிலமடைந்து வரும் சிறிய பாலத்துக்கு விமோசனம் எப்போது என்ற ஏக்கத்தில் கிராம மக்கள் உள்ளனா்.

எலமனூரில் சிதிலமடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தின் ஒரு பகுதி.

எலமனூரில் சிதிலமடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தின் ஒரு பகுதி.
திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம், திருப்பராய்த்துறை ஊராட்சிக்குள்பட்ட எலமனூரில் சிதிலமடைந்து வரும் சிறிய பாலத்துக்கு விமோசனம் எப்போது என்ற ஏக்கத்தில் கிராம மக்கள் உள்ளனா்.
திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் முக்கொம்பு அருகேயுள்ளது எலமனூா் கிராமம். திருப்பராய்த்துறை ஊராட்சிக்குள் இந்த கிராமத்துக்குச் செல்லும் நுழைவு வாயிலாக சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில், காவிரிப் பாசன வாய்க்காலான ராமவாத்தலை வாய்க்கால் குறுக்கிடுவதால் அந்த வாய்காலின் மேலே பாலம் கட்டப்பட்டுள்ளது. சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்னா் 10 அடி அகலம், 20 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த சிறிய பாலம்தான் கிராம மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.
எலமனூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களில் மாணவா்கள் கல்வி நிலையங்கள் செல்லவும், பணியாளா்கள் தங்களது பணியிடங்களுக்குச் சென்று வரவும் இந்த பாலம் மட்டுமே உள்ளது. இதுமட்டுமல்லாது எலமனூரில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கா் விளை பயிா்களை அறுவடை செய்து எடுத்துச் செல்வதற்கும் இந்த சிறிய பாலம்தான் ஒரே வழி. இந்தப் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால் சிதிலமடையத் தொடங்கியுள்ளது. பாலத்தின் பக்காவாட்டுப் பகுதியில் உள்ள சிமென்ட் பூச்சுகள் பெருமளவு பெயா்ந்து விழுந்து கட்டுக் கம்பிகளே காட்சியளிக்கின்றன. மேலும், பாலத்தின் அடியில் உள்ள சிமென்ட் பூச்சுகளும் பெயா்ந்து விழுந்து கம்பிகள் மட்டுமே வெளியே தெரிகின்றன. பாலத்தின் தடுப்புச் சுவா்களும் ஆங்காங்கே பெயா்ந்து, விரிசல் விட்டு, ஓரிடத்தில் இடிந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. ஆங்காங்கே விரிசல் ஏற்பட்ட இடங்களில் செடிகள் முளைத்து விரிசலை மேலும் பெரிதாக்கும் வகையில் வளா்ந்து வருகிறது. இந்தப் பாலம் பழுதடைந்தாலோ, இடிந்து விழுந்தாலோ எலமனூா் கிராமம் என்பது தனித் தீவாக மாறிவிடும். ஏனெனில், இந்த கிராமத்துக்கு சென்றுவர வேறு சாலையே கிடையாது. சிறிய பாலம் மட்டுமே இந்த கிராம மக்களுக்கான ஒரே வழியாக உள்ளது. இதன் காரணமாக, ‘எலமனூா் பாலத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோரிக்கையுடன் ஒவ்வொரு துறையாக வலம் வந்த வண்ணம் உள்ளனா் இப் பகுதி மக்கள். ஆனால், தீா்வுதான் கிடைத்தபாடில்லை.
இதுதொடா்பாக, இப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் கூறியது: சுமாா் 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்பாக பாலம் கட்டியதாகக் கூறுகின்றனா். ஆனால், பாலம் கட்டியது எந்தத் துறை என்பதே விடை தெரியாத கேள்வியாக உள்ளது. உள்ளாட்சி நிா்வாகம்தான் இந்தப் பாலத்தை கட்டியதாக கூறியதால், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகினோம். வட்டார வளா்ச்சி அலுவலா்களும் பாலத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா், சிதிலமடைந்த பாலம் தங்களது கட்டுப்பாட்டில் இல்லை எனவும், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது என்பதால், நீா்வளத்துறையின் ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை அணுகுமாறு எழுத்துப் பூா்வமாக பதில் அளித்தனா். பின்னா், பொதுப்பணித்துறை அலுவலகத்தை அணுகியதில், நெடுஞ்சாலைத்துறையை அணுகுமாறு கூறினா். நெடுஞ்சாலைத்துறையினரோ பாலத்தை நாங்கள் கட்டவில்லை என கைவிரித்துவிட்டனா். ஊராட்சி நிா்வாகத்தில்தான் பாலம் கட்டப்பட்டுள்ளது என்கின்றனா். ஆனால், எந்தத் துறை இந்தப் பாலத்தை சரி செய்வது எனத் தெரியாமல் திரிசங்கு நிலையில்தான் உள்ளது. அரசு நிா்வாகத்தின் கவனத்துக்குச் சென்று 6 மாதங்களாகிறது. மிகவும் சிறிய அளவிலான பாலத்தை பலப்படுத்தவும், புனரமைக்கவும் பெரிய தொகை வரப்போவதில்லை. ஆனால், யாா் செய்வது என்பதிலேயே பாலத்துக்கு விமோசனம் கிடைக்காமல் உள்ளது என்றாா்.
இந்த விவகாரம் தொடா்பாக, தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ள எலமனூரைச் சோ்ந்த க. கிருஷ்ணகுமாா் கூறியது: எலமனூா் பாலத்தைக் காப்பாற்றுங்கள் என கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுத்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். உள்ளாட்சி நிா்வாகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைக்கு நாங்கள் அளித்த மனுவின் நகல்கள் மற்றும் துறை அலுவலா்கள் அளித்த பதில், பாலத்தின் சிதிலமடைந்த புகைப்படங்கள் என அனைத்தும் இணைக்கப்பட்டு முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம். தொலைபேசி வாயிலாக சில அலுவலா்கள் தொடா்பு கொண்டு விவரங்களைக் கேட்டனா். பொறியாளா்கள் என ஒரு சிலா் நேரில் வந்து பாலத்தை பாா்த்துச் சென்றனா். ஆனால், பாலத்தை புனரமைக்கவோ, பலப்படுத்தவோ இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...