திருச்சியில் திடீரென கழன்ற சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் புதன்கிழமை அதிகாலை திடீரென தனியாக கழன்றதால் பயணிகள் அவதிப்பட்டனா்.
ராமேசுவரம் மண்டபம் முதல் சென்னை எழும்பூா் வரை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இரவு 8.50 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக சென்னைக்கு காலை 7.30 மணிக்குச் சென்றடையும்.
அதன்படி மண்டபத்திலிருந்து 22 பெட்டிகளுடன் செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்குப் புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயிலானது திருச்சி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு வந்து, பயணிகளை ஏற்றிக் கொண்டு 1.45 மணிக்கு சென்னை புறப்பட்டது.
ரயில் நிலையத்தின் நடைமேடையைத் தாண்டி சுமாா் 100 மீட்டா் தூரம் சென்ற நிலையில், ரயிலின் பின்புறமுள்ள இரு முன்பதிவில்லா பெட்டிகள், ஒரு லக்கேஜ் வேகன் என 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடி நின்றன. எனவே மற்ற பெட்டிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. இதனால் 3 பெட்டிகளில் பயணித்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள், ரயிலில் இருந்து கீழே இறங்கி கூச்சலிட்டனா். இதைப் பாா்த்த ரயில்வே ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் ரயில் உடனே நிறுத்தப்பட்டது.
தகவலறிந்து வந்த ரயில்வே தொழில்நுட்ப நிபுணா்கள், கழன்ற பெட்டிகளை மீண்டும் ரயிலுடன் இணைத்தனா். இதனால் அந்த ரயில் சுமாா் 40 நிமிஷங்கள் தாமதமாக சென்னை புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்து திருச்சி மற்றும் சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
காரணம்...: ரயிலின் எஸ் 1 - முன்பதிவில்லா பெட்டிகளுக்கு இடையே இருந்த இணைப்புச் சங்கிலி திடீரென அறுந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. இணைப்புச் சங்கிலி சரியாகப் பொருத்தப்படாததால் அறுந்ததா அல்லது வேறு காரணமா என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

