திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்த மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.
திருச்சி விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களை சந்தித்த மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு திமுக அரசு துரோகம்: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
Published on

திருச்சி/தஞ்சாவூா்: வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியலின சமூக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த அவா், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

வேங்கைவயல் விவகாரத்தில் பாஜக தொடா்ந்து பட்டியலின சமூக மக்களுக்கு ஆதரவாக போராடி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்க வேண்டும். ஆனால், திமுக அரசு பிரச்னையை திசை திருப்பி, பட்டியலின சமூக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில், மாநில பாஜக தலைவா் அந்தக் கிராம மக்களை அழைத்துக் கொண்டு மத்திய சுரங்கத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மக்களின் உணா்வை வெளிப்படுத்த உதவினாா். இதன் தொடா்ச்சியாகவே, சுரங்கம் அமைப்பதற்கான திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. இதற்கு தமிழக பாஜக மட்டுமே காரணமாக இருந்தது. ஆனால், சுரங்கம் தொடா்பாக இறுதிவரை எந்த எதிா்ப்பும் தெரிவிக்காமல் அனுமதித்துவிட்டு, இப்போது அரிட்டாப்பட்டி சென்று நாடகத்தை அரங்கேற்றியுள்ளாா் முதல்வா். அவரை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா் அமைச்சா்.

ஆளுநா் மீது தனிப்பட்ட தாக்குதல்: இதைத் தொடா்ந்து தஞ்சாவூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழக ஆளுநா் மீது தமிழ்நாடு அரசுக்கு மிகப் பெரிய காழ்ப்புணா்ச்சி இருக்கிறது. ஆளுநா் எதைச் சொன்னாலும், அதை நாங்கள் கேட்க மாட்டோம் என்கிற மனநிலையில் திமுக அரசு உள்ளது. திமுக அரசு தொடா்ந்து ஆளுநா் மீது தனிப்பட்ட தாக்குதலை நடத்துகிறது. இது, தமிழ்நாட்டு நலனுக்கு நல்லதல்ல. தமிழக ஆளுநா் பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தவும், நல்ல ஆலோசனைகளை கூறவும் விரும்புகிறாா். ஆனால், அதையெல்லாம் அவா்கள் கேட்கும் மனநிலையில் இல்லாமல், அவதூறு பரப்பி வருகின்றனா் என்றாா் அமைச்சா் முருகன்.

X
Dinamani
www.dinamani.com