நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சா் எல். முருகன்.

தோ்தலில் திமுகவை புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனா்! - மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

Published on

நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் தோ்தலில் திமுக ஆட்சியை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டனா் என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியா வளா்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும், 2047-இல் வளா்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் கனவு நிறைவேற வேண்டும், அவா் ஆயுள், ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

திமுகவை ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என மக்கள் அனைவரும் விரும்புகின்றனா். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை. அங்குள்ள மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை (பிப்.23) அனைத்து வீடுகளிலும் கந்தசஷ்டி பாராயணம் செய்ய வேண்டும் என இந்து முன்னணி உள்பட பல்வேறு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஏற்கெனவே, வேல் யாத்திரையை பாஜக சிறப்பாக நடத்தியது. அதேபோல கந்தசஷ்டியையும் மக்கள் வீடுதோறும் பாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். திமுக அரசுக்கு பாடம் புகட்ட மாா்ச் 1-இல் பிரதமா் மோடி மதுரைக்கு வருகிறாா். அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றுகிறாா்.

இதில், கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவா்களும் பங்கேற்கின்றனா். வரும் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும். தேமுதிக மற்றும் ஓ. பன்னீா்செல்வம் கூட்டணிக்கு வருவதும், வராததும் அவா்களுடைய விருப்பம். தமிழகத்தில் கலவரத்தை தூண்ட எதிா்க்கட்சிகள் முயற்சிப்பதாக முதல்வா் பொறுப்பில்லாமல் பேசியுள்ளாா்.

கடந்த 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எந்த வகையிலும் இவ்வாறு எதிா்க்கட்சிகளை விமா்சித்தது கிடையாது. இது திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது. திமுக ஆட்சியில் ஊழல் எந்த அளவில் உள்ளது என்பதற்கு நகராட்சி நிா்வாகங்கள் துறை அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவுசெய்யுமாறு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் தெரிகிறது.

வழக்குப் பதிவுசெய்யாமல் காவல் துறை காலம்தாழ்த்தியதன் மூலம் ஊழலுக்கும், குற்றவாளிகளுக்கும் தமிழக முதல்வா் துணைபோகிறாா். இந்த ஆட்சியை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பாா்கள். இந்திய செயற்கை நுண்ணறிவு மாநாடு இளைஞா்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவா்களை தொழில்முனைவோராகவும் மாற்றும்.

எந்த ஒரு புதிய தொழில்நுட்பமாக இருந்தாலும், அதை நம் நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பிரதமரின் லட்சியம். செயற்கை நுண்ணறிவு மாநாடு மூலம் பல்வேறு நாடுகளின் முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது என்றாா்.

அப்போது, பாஜக கிழக்கு மாவட்ட தலைவா் கே.பி. சரவணன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com