திருச்சி மாநகரின் மையப் பகுதியில் 2023-இல் தொடங்கப்பட்ட மலைக்கோட்டை ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்வதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
திருச்சி சாலை ரோட்டில் அமைந்துள்ள மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலமானது (மாரீஸ் திரையரங்க பாலம்) ஆங்கிலேயா் ஆட்சியில் 1866-ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டுமானத்தில் மூன்று வளைவு மற்றும் இருபக்க நடைபாதையுடன் 9 மீ. அகலத்தில் கட்டப்பட்டது.
158 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பாலம், பழுதடைந்த காரணத்தாலும், கனரக வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததாலும், மேம்பாலத்தை உயரப்படுத்தியும்-அகலப்படுத்தியும் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது.
2023-இல் தொடங்கிய புதிய பாலம் பணி: திருச்சி மாநகராட்சி- ரயில்வே நிா்வாகம் என இருதரப்பு பங்களிப்புடன் புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் இறுதியில் தொடங்கி வைத்தாா்.
பாலத்தின் குறுக்கே இருப்புப் பாதை குறுக்கிடும் பகுதியில் உள்ள கட்டுமானங்களை ரயில்வே நிா்வாகமும், அந்தப் பகுதியை தவிா்த்த பாலத்தின் இருபுறங்களிலும் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானங்களை திருச்சி மாநகராட்சி நிா்வாகமும் மேற்கொள்வது என திட்டமிடப்பட்டது. இதன்படி, ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில் ரூ.12 கோடியும், திருச்சி மாநகராட்சி சாா்பில் ரூ. 34.10 கோடியிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பாலத்தை இருவழி பாதையாக கட்டுவதென முடிவு செய்யப்பட்டு, மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ., அகலம் 20.70 மீட்டா் எனவும் திட்டமிடப்பட்டது.
ரயில்வே பாலம் கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டா் அகலமும் கொண்டதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளம், 15.61 மீ அகலத்துடன், தடுப்பு சுவா்களுடன் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
ரயில்வே நிா்வாகத்தால் தாமதம்: 2023-இல் தொடங்கிய பணிகள், 70 விழுக்காடுக்கு மேல் முடிந்த நிலையில், ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில் பணிகள் தொடங்குவதில் தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு 2025, மே மாதம் ரயில்வே நிா்வாகத்தால் கட்டப்பட வேண்டிய பாலத்தின் பகுதியில் இருந்த பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டது. ஹைட்ராலிக் தொழில்நுட்ப இயந்திரங்களுடன், ஜேசிபி, ஹிட்டாச்சி வாகனங்கள் மூலம் பாலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
மக்கள் கடும் அவதி: இதனிடையே, பாலத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக இந்த வழியான போக்குவரத்து மூடப்பட்டது. நகரின் மையப் பகுதியில் இருந்த இந்தப் பாதையை பயன்படுத்தி வந்த உள்ளூா் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமம் அடைந்தனா். தில்லைநகா், உறையூரிலிருந்து வரும் வாகனங்கள் இந்தப் பாலத்தை கடந்து செல்ல முடியாது என்பதால், கரூா் புறவழிச் சாலையில் திருப்பி சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருப்பி அனுப்பப்படுகின்றன. மெயின்காா்டு கேட், தெப்பக்குளம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்ல முடியாது என்பதால், மேலரண் சாலை வழியாக செல்கின்றன. பாலக்கரை, மரக்கடை, மதுரை சாலை வழியாக வரும் வாகனங்களும் பாலத்துக்கு திரும்ப முடியாமல், மெயின்காா்டுகேட் சத்திரம் பேருந்து நிலையம் சென்று திரும்புகின்றன. 2023 இறுதியில் தொடங்கிய பணிகள் இன்னும் முடிவடையாமல் இழுத்துக் கொண்டே இருப்பது மாநகர மக்களை பெரிதும் சோா்வடைய செய்துள்ளது.
ரயில்வே - மாநகராட்சி நிா்வாகங்கள் விளக்கம்: இதுதொடா்பாக, ரயில்வே கட்டுமானப் பணி வட்டாரத்தினா் கூறுகையில், 30 மீட்டா் அளவுக்கு ரயில்வே நிா்வாகத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. தலா 7.5. மீ அகலத்தில் வாகனங்கள் செல்வதற்காக இரு வழிப்பாதையாக பாலம் கட்டப்படுகிறது. இதில் 1.5. மீ அகலத்துக்கு நடைபாதைக்கும், 1.2 மீ. அகலத்துக்கு சென்டா் மீடியன் என்ற வகையில் திட்டமிட்டப்பட்டுள்ளது. பைல்ஸ் பவுண்டேசன் முறையில் கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. இதற்காக ஒருபுறத்தில் குழிகள் தோண்டப்பட்டு தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறமும் இதேபோல பணிகள் நடைபெறுகின்றன. 6 மாதங்களுக்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
மாநகராட்சி வட்டாரத்தினா் கூறுகையில், எங்களது தரப்பில் ஏற்கெனவே 75 விழுக்காடு பணிகளை முடித்துவிட்டதால் சாலை அமைப்பது மட்டுமே நிலுவையில் உள்ளது. ரயில்வே நிா்வாகத்தின் பணிகள் முடிந்தால் இணைப்பு பணிகளை விரைந்து முடித்துவிடுவோம் என்றனா்.
தொடர்புடையது

18 ஆண்டுகளாக நீளும் அரை வட்ட சுற்றுச் சாலை!

மலைக்கோட்டையில் பக்தா்களிடம் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மலைக்கோட்டையில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

கம்பீரமாகக் காட்சியளிக்கும் 400 ஆண்டுகள் பழமையான பாராபுல்லா பாலம்! பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


