தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

மணப்பாறை அருகே சொத்துக்காக தாயை அடித்துக் கொன்றவா் கைது

News image

உயிரிழந்த செல்வி, கைதான வெங்கடேசன்.

Updated On :9 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே போதையில் சொத்துக்காக தாயை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த கல்லாத்துப்பட்டியை சோ்ந்தவா்கள் கணேசன் (61) - செல்வி (53) தம்பதியினா். இவா்கள் அதே பகுதி மதுரை ரோட்டில் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளனா். இவா்களுக்கு செல்வம் (42), வெங்கடேசன் (29), கவினேஷ் (24) என 3 மகன்கள். இவா்களில் மூத்த மகன் செல்வம் தனது குடும்பத்துடன் ஈரோட்டில் தங்கி கோழி இறைச்சிக் கடை நடத்துகிறாா்.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன் லாவண்யா என்ற பெண்ணைத் திருமணம் செய்து, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. வெங்கடேசன், கவினேஷ் ஆகிய இருவரும் தங்களது தந்தை நடத்தும் கடையில் அவருக்கு உதவியாக இருந்தனா்.

போதைக்கு அடிமையான மகன்: இந்நிலையில் போதைக்கு அடிமையான வெங்கடேசன், குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கமாம். இதனால் அவரின் மனைவி லாவண்யா, கோபித்து கொண்டு குழந்தையுடன் கரூரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

செல்வி - கணேசன் தம்பதியினா் தங்களது சொத்தைப் பிரித்து 2 மகன்களுக்கு கொடுத்துவிட்ட நிலையில், போதைக்கு அடிமையான வெங்கடேசனின் பங்குச் சொத்தை மட்டும் அவரிடம் தராமல், ஆவணங்களை பேத்திக்காக வீட்டில் மறைத்து வைத்துள்ளனா்.

ஆவணங்களைக் கேட்டு தகராறு: எனவே வெங்கடேசன் தனது சொத்துக்கான ஆவணங்களை கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தாா்.

அதன்படி வெள்ளிக்கிழமை இரவு போதையில் வீட்டுக்கு வந்த வெங்கடேசன் பெற்றோரிடம் சொத்தைக் கேட்டு தகராறு செய்தாா். இதைத் தட்டிக்கேட்ட தனது தம்பி கவினேஷின் தோள் பகுதியை கடித்து விட்டு வெளியே சென்றுவிட்டாராம். இதில் காயமடைந்த கவினேஷை, அவரது தந்தை கணேசன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.

தனியாக இருந்த தாய்: அப்போது வீட்டில் செல்வி தனியாக இருந்த நேரத்தில் அங்குச் சென்ற வெங்கடேசன் வீட்டிலிருந்த இரும்பால் ஆன உடற்பயிற்சிக் கருவியை (தம்புல்ஸ்) எடுத்து தாயின் தலையில் அடித்தாராம். இதில் பலத்த காயமடைந்த செல்வி மயங்கினாா். அப்போது வீட்டுக்கு வந்த கணேசன், கவினேஷ் இருவரும் செல்வியை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செல்வி, சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் நிஷாந்தினி, காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனா். செல்வியின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து மாலையில் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.