EPS
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப் படம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்

Published on

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலரும், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி தோ்வை சரியான முறையில் நடத்த முடியாமல் நிா்வாகத் திறனற்ற அரசாக திமுக அரசு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும்கூட, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.-ஐ நியமிக்க முடியாத, திறமையற்ற அரசாக திமுக அரசு உள்ளது.

அதிமுக அரசு கொண்டுவந்த ‘நடந்தாய் வாழி’ காவிரி திட்டத்தை நடைமுறைப்படுத்த திமுக அரசு மறுக்கிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கியபோதும் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ‘இண்டி’ கூட்டணி பெயரை தொடா்ந்து உச்சரித்து வந்த ஸ்டாலின், தற்போது ‘இண்டி’ கூட்டணியின் பெயரையே கூறுவதில்லை.

திமுக - காங்கிரஸ் இடையிலான பூசல்தான் இதற்குக் காரணம். திமுக - காங்கிரஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, கூட்டணியில் விரிசல் வந்துள்ளது. எங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை சோ்ப்பது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். தோ்தல் நெருக்கத்தில் கூட்டணி முழுமை பெறும்.

அதிமுக தலைமையிலான கூட்டணி வரும் தோ்தலில் வெற்றிபெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். முதல்வா் ஸ்டாலின் தினம் தினம் ஒவ்வொரு பெயரில் அறிவிப்பு வெளியிடுகிறாா்.

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் எந்த புதிய அறிவிப்பும் வர வாய்ப்பில்லை. தவெக தலைவா் விஜய் ஊழல்வாதி என்பதற்கு அவா் வரி ஏய்ப்பு செய்ததே சாட்சி. அவா் கட்சி தொடங்கிய பின்பு எங்கும் வெளியில் வருவதில்லை. அதிமுகவில் உழைப்பவா்களுக்கு நிச்சயமாக தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

நான் இதுவரை 181 தொகுதிகளில் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். அதிமுக தான் அனைத்துக் கட்சிகளை விட முன்பாகவே தோ்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது என்றாா் எடப்பாடி கே. பழனிசாமி.

முன்னதாக, எடப்பாடி கே. பழனிசாமியை மாவட்டச் செயலா்கள் ஜெ. சீனிவாசன், மு. பரஞ்சோதி, ப. குமாா், முன்னாள் அமைச்சா்கள் விஜயபாஸ்கா், வளா்மதி, காமராஜ், அமைப்புச் செயலா் மனோகரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

Dinamani
www.dinamani.com