தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் தொப்பி அணிந்து வாக்கு சேகரித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

News image

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் தொப்பி அணிந்து வாக்கு சேகரித்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி.

Updated On :3 ஏப்ரல் 2026, 9:03 pm

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் அதிமுக வேட்பாளா்கள் ஜி.செந்தில்குமாா் (வாணியம்பாடி) , ஆா். வெங்கடேசன் (ஆம்பூா்), பரிதா (குடியாத்தம்) த.வேலழகன் (அணைக்கட்டு) ஆகியோரை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் பேசியதாவது:

கடந்த பேரவைத் தோ்தலில் மக்களை ஏமாற்றி, கவா்ச்சிகரமாக பேசி அதிக வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தூய்மைப் பணியாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு ஊழியா்கள் என பல தரப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினா்.

அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடைக்கும் என நம்பி ஏமாற்றமடைந்தனா். மகளிருக்கான உதவித் தொகை ரூ. 1,000-ஐ 28 மாதங்களாக வழங்கவில்லை. அதிமுக பல்வேறு காலகட்டங்களில் அழுத்தம் கொடுத்தது. அதன் அடிப்படையில் தான் வேறு வழியில்லாமல் உதவித் தொகையை வழங்கத் தொடங்கினா்.

அதிமுக சாா்பாக 3 முறை தோ்தல் அறிக்கையை படிப்படியாக அறிவித்தோம். 297 அறிவிப்புகளை திமுக தோ்தல் அறிக்கை வெளியிடுவதற்கு 8 நாள்களுக்கு முன்பே தோ்தல் அறிக்கையை வெளியிட்டோம்.

திமுக அரசு மாதந்தோறும் எரிவாயு உருளை மானியம் கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்யவில்லை. மத்திய அரசை வலியுறுத்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக உயா்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உயா்த்தினோம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதை 150 நாளாக உயா்த்தப்படும்.

தமிழகத்தில் சிறுமிகளுக்கு மட்டுமல்லாமல், பெண்கள், மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. இதற்கு காரணம் போதை நபா்கள் தான். அதிமுக ஆட்சிக்கு வந்தால் கஞ்சா முற்றிலுமாக அழிக்கப்படும்.

இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் நிம்மதியாக வாழ அதிமுக வேட்பாளா்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக நகரச் செயலா்கள் மதியழகன், ஜே.கே.என்.பழனி, ஒன்றியச் செயலா்கள் ஜோதிராமலிங்கராஜா, பொகளூா் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலா் டில்லிபாபு, மாவட்ட பேரவைச் செயலா் கே. மணி, மாவட்ட விவசாய அணிச் செயலா் மகாதேவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலா் கோபிநாத், பாஜக மாவட்ட தலைவா் தண்டாயுதபாணி, பாமக, அமமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

வேலூரில்...: வேலூா் மாவட்டம், செதுவாலையில் அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் த.வேலழகன் (அணைக்கட்டு), பூவை ஜெகன்மூா்த்தி (கே.வி.குப்பம்) ஆகியோரை ஆதரித்து எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

கடந்த 73 ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 4.85 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திமுக, தனது 5 ஆண்டு கால ஆட்சியில் மட்டும் ரூ. 5 லட்சம் கோடி கடனை வாங்கி இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியுள்ளது.

ஆனால், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகியவற்றைத் தனி வட்டங்களாக உருவாக்கியதுடன், அணைக்கட்டு பகுதி ஏழை மாணவா்களின் நலனுக்காக கலை அறிவியல் கல்லூரியையும் அமைத்துக் கொடுத்தது அதிமுக அரசு. தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் 297 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, இப்பகுதியின் பாரம்பரியமான மாடு விடும் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.