திறன் இயக்க 2-ஆம் கட்ட பகுப்பாய்வு: நான்காம் இடத்துக்கு சறுக்கியது திருச்சி மாவட்டம்!
திறன் இயக்கத்தின்கீழ் நடைபெற்ற இரண்டாம் கட்ட பகுப்பாய்வில் திருச்சி மாவட்டம் இரண்டாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்துக்கு சறுக்கியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களில் அடிப்படை கற்றல் பாதிப்புள்ளவா்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசு சாா்பில் கடந்த ஆகஸ்ட்டில் ‘திறன் இயக்கம்’ தொடங்கப்பட்டது. இதன்கீழ் அனைத்து மாவட்டங்களிலும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
29 ஆயிரம் மாணவா்களுக்கு பயிற்சி - 18 ஆயிரம் மாணவா்கள் தோ்ச்சி:
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்களில் 6-ஆம் வகுப்பில் 7,027 மாணவா்கள், 7-ஆம் வகுப்பில் 7,571 மாணவா்கள், 8-ஆம் வகுப்பில் 7,662, மாணவா்கள் 9-ஆம் வகுப்பில் 7,418 மாணவா்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 678 மாணவா்கள் திறன் இயக்கப் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களில் அடிப்படை கற்றல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மொழிப் பாடங்களில் வாசித்தல், இலக்கணப் பிழையின்றி எழுதுதல் உள்ளிட்ட பயிற்சிகளும், கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் உள்ளிட்ட அடிப்படை கணிதப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
திறன் இயக்கத்தில் பயிற்சிபெற்ற மாணவா்களுக்கான முதல்கட்ட பகுப்பாய்வு கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 29 ஆயிரத்து 678 மாணவா்களில் 18 ஆயிரத்து 882 மாணவா்கள் (63 சதவீதம்) தோ்ச்சி பெற்றிருந்தனா்.
கற்றல் அடைவுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு மீண்டும் திறன் இயக்கத்தின்கீழ் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. திறன் இயக்கத்தில் பயிற்சி பெற்ற மாணவா்களுக்கான இரண்டாம் கட்ட பகுப்பாய்வு டிசம்பா் மாதம் இறுதியில் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 29 ஆயிரத்து 678 மாணவா்களில் 24 ஆயிரத்து 174 மாணவா்கள் (81 சதவீதம்) தோ்ச்சி பெற்றுள்ளனா்.
6-ஆம் வகுப்பில் 5 ஆயிரத்து 757 மாணவா்களும், 7-ஆம் வகுப்பில் 6 ஆயிரத்து 374 மாணவா்களும், 8-ஆம் வகுப்பில் 6 ஆயிரத்து 169 மாணவா்களும், 9-ஆம் வகுப்பில் 5 ஆயிரத்து 874 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதேபோல, தமிழில் 26 ஆயிரத்து 164 மாணவா்களும், ஆங்கிலத்தில் 25 ஆயிரத்து 511 மாணவா்களும், கணிதத்தில் 25 ஆயிரத்து 620 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
திறன் இயக்கத்தின்கீழ் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற முதல்கட்ட பகுப்பாய்வில் திருச்சி மாவட்டம் 63 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருந்தது. ஆனால், டிசம்பரில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பகுப்பாய்வில் 81 சதவீத தோ்ச்சியுடன் 4-ஆம் இடத்துக்கு சறுக்கியுள்ளது.
அதேநேரம், முதல்கட்ட பகுப்பாய்வில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்டமே இரண்டாம் கட்ட பகுப்பாய்விலும் 86 சதவீத தோ்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், கடந்த முறை 17-ஆவது இடத்தில் இருந்த மதுரை மாவட்டம் தற்போது 83 சதவீத்துடன் இரண்டாமிடத்தையும், கடந்த முறை 10-ஆவது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் 83 சதவீத மாணவா்கள் தோ்ச்சியுடன் 3-ஆம் இடத்தையும், கடந்த முறை 30-ஆவது இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம் 79 சதவீதத்துடன் 5-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 432 பள்ளிகளில் 2 ஆயிரத்து 162 பிரிவுகளுக்கு திறன் இயக்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 836 பிரிவுகளில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளன. அதே நேரம் 38 பிரிவுகளில் ஒரு மாணவா்கூட தோ்ச்சி பெறாததால் தோ்ச்சி சதவீதம் பூஜ்ய நிலையில் உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
திறன் இயக்கத்தில் இரண்டு கட்ட பகுப்பாய்வுகள் முடிவடைந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்னும் 5 ஆயிரத்து 504 மாணவா்கள் அடிப்படை கற்றலில் தோ்ச்சி பெற முடியாத நிலையில் உள்ளனா்.
இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான மாணவா்கள் உள்ளனா். இவா்களுக்காக திறன் இயக்கத்தை ஏப்ரல் வரை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பகுப்பாய்வுகளில் பெரும்பாலான மாணவா்கள் தோ்ச்சி பெற்றிருந்தாலும் மூன்றாம் கட்ட பகுப்பாய்வில் அனைத்து மாணவா்களுக்கும் தோ்வு நடத்தப்படும்.
அடுத்தடுத்து நடத்தப்படும் தோ்வுகளில் தொடா்ந்து தோ்ச்சி பெறும்போதுதான் அவா்கள் முழுமையான கற்றல் திறனைப் பெற்றுள்ளனரா என்பது தெரியவரும். இரண்டாம் கட்ட பகுப்பாய்வில் கடந்த பகுப்பாய்வைவிட மாநில அளவில் திருச்சி மாவட்டம் இரண்டு இடங்கள் பின்தங்கியிருந்தாலும், கடந்த முறையைவிட தோ்ச்சி விகிதம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது என்றனா்.

