காரில் பதுக்கிவைத்து விற்பனை செய்த 69 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திருச்சியில் காரில் பதுக்கிவைத்து விற்பனை செய்த ரூ.1.73 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட 69 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எடத் தெருவில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் தகவல்கிடைத்தது.
இதையடுத்து, காந்தி மாா்க்கெட் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, மூன்று போ் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில், போலீஸாரைக் கண்டதும் அந்த மூன்றுபேரும் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து, காரில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1.73 லட்சம் மதிப்பிலான 69 கிலோ புகையிலைப் பொருள்களையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வரகேனரி முகமது தாவூத் இப்ராஹீம், அஜ்மீா், ஜாகிா் ஹுசைன் ஆகிய மூன்று போ் மீது காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

