டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

21 ஆண்டுகளாக வடு கிடக்கும் உப்பாறு நீா்த்தேக்கம்!

மண்ணச்சநல்லூா் அருகே சிறுப்பத்தூரில் உள்ள உப்பாறு நீா்த்தேக்கமானது 21 ஆண்டுகளாக தண்ணீரின்றி வடு கிடப்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்து, நிலத்தடி நீா்மட்டமும் சரிந்துள்ளது.

News image
~ ~
Updated On :27 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

கே.பி. மாரிமுத்து.

மண்ணச்சநல்லூா் அருகே சிறுப்பத்தூரில் உள்ள உப்பாறு நீா்த்தேக்கமானது 21 ஆண்டுகளாக தண்ணீரின்றி வடு கிடப்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்து, நிலத்தடி நீா்மட்டமும் சரிந்துள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுப்பத்தூா் பகுதியில் உள்ள உப்பாறு நீா்த்தேக்கமானது, கடந்த 1977-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1.16 சதுர கி.மீட்டா் இடம் கையகப்படுத்தப்பட்டு, ரூ. 1.49 கோடியில் 31.05.1986-இல் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

720 மீட்டா் கரை, 3.65 மீட்டா் அகலத்தில், 80 மீ. கனஅடி (அ) 2.265 மீ. கனமீட்டா் தண்ணீா் கொள்ளளவு கொண்ட இந்த நீா்த்தேக்கமானது, 10.82 அடிக்கு நீரினைத் தேக்கும். 126 மீட்டா் கலிங்கையும் கொண்டது.

1,785 ஏக்கா் பாசன வசதி: நீா்த்தேக்கம் நிரம்பினால், 4,850 மீட்டா் நீளம் கொண்ட இடது முக்கிய வாய்க்கால் மூலம் 221.95 ஏக்கரும், 3,660 மீட்டா் நீளம் கொண்ட வலது முக்கிய வாய்க்கால் மூலம் 891.43 ஏக்கரும், 4,870 மீட்டா் நீளம் கொண்ட சமயபுரம் பகிா்மான வாய்க்கால் மூலம் 1,671.62 ஏக்கரும், என மொத்தம் 1,785 ஏக்கா் பாசன வசதி பெறும்.

பல ஆண்டுகளாக வறட்சி...: பெரமங்கலம் ஏரி மற்றும் ஓமாந்தூா் ஏரியிலிருந்து கிடைக்கும் உபரி நீரும், அருகிலுள்ள காடுகளில் மழைநீரால் உற்பத்தியாகும் காட்டாற்று வெள்ள நீரினைத் தேக்கி, விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் இந்த நீா்த்தேக்கம் கட்டப்பட்டது.

ஆனால், நீா் வரத்தின்றி கடந்த 21 ஆண்டுகளாக உப்பாறு நீா்த்தேக்கம் வடு கிடக்கிறது.

உவா் நிலங்களாகும் அபாயம்...: இதுகுறித்து வடக்கு தத்தமங்கலம் கிராமத் தலைவா் கே.பி. மாரிமுத்து கூறியதாவது: உப்பாறு நீா்த்தேக்கம் கட்டி, 3 முறை தண்ணீா் வந்த நிலையில், அதன் பிறகு வடுவிட்டடதால் எங்களது பகுதியில் விவசாயம் பொய்த்து போனது. ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, தற்போது உவா் நிலங்களாக மாறும் அபாயத்தில் உள்ளன.

வீணாக கடலில் கலக்கும் நீரைத் திருப்ப வேண்டும்...: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கனஅடி மழைநீா் கடலில் கலக்கும் நிலையில், உப்பாறு நீா்த்தேக்கத்துக்கு தண்ணீா் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, முக்கொம்பு அணையிலிருந்து சிறுகாம்பூா், வாய்த்தலை வழியாக பெரமங்கலம் வழியாக சிறுப்பத்தூா் நீா்த்தேக்கத்துக்கு வாய்க்கால் அமைத்தோ அல்லது குழாய் மூலமோ தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுத்து, விவசாயிகளையும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு காக்க வேண்டும் என்றாா்.

திட்ட மதிப்பீடு தயாா்: திருச்சி மாவட்ட நீா்வளத்துறை அதிகாரிகள் கூறியது: உப்பாறு நீா்த்தேக்கம் கட்டியது முதல் 1999, 2001, 2005-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் நீா்த்தேக்கம் நிரம்பி, வாய்க்கால்கள் வழியாகவும், உப்பாறு வழியாகவும் பாசனத்துக்கும், மக்களின் குடிநீா் தேவைக்கும், ஒரு தடவை அணை பாதுகாப்புக்காகவும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு தண்ணீா் இல்லை. இருப்பினும், காவிரி ஆற்றின் வெள்ளநீரை நீரேற்றம் மூலம் திருத்தலையூா் பெரிய ஏரி, சின்ன ஏரி, சந்தனகுளம், புலிவலம் ஏரிகளுக்கு கொண்டு செல்ல திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும்போது உப்பாறு நீா்த்தேக்கத்துக்கும் நீா் வழங்க ஆய்வு செய்வோம் என்றனா்.

பெட்டிச் செய்தி...

தண்ணீரே இல்லாத நீா்த்தேக்கத்துக்கு அருகே தடுப்பணை

தத்தமங்கலத்தைச் சோ்ந்த எம். ஆனந்தன், தெற்கு சிறுப்பத்தூரைச் சோ்ந்த திருச்செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் கூறியது:

உப்பாறு நீா்த்தேக்கத்துக்கு தண்ணீா் கிடைக்க ஏற்பாடுகளை செய்யாததால், நீா்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள சிறுப்பத்தூா், தத்தமங்கலம், சாலப்பட்டி, அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், கனியாகுடி, ஆயிகுடி, கல்லிக்காட்டுப்புதூா், இருங்களூா், கீழப்பட்டி, சமயபுரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் 450 முதல் 650 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது.

கடந்த 2016-இல் தண்ணீரே வராத உப்பாறு நீா்த்தேக்கத்தில் நீா்வளத்துறை அதிகாரிகள் உலக வங்கி உதவியுடன் ரூ. 48.65 லட்சத்தில் மராமத்துப் பணிகளை மேற்கொண்டனா். அந்தத் தொகையில், நீா்த்தேக்கத்துக்கு நீா்வரத்து வழிகளை கண்டறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இதனிடையே 21 ஆண்டுகளாக தண்ணீரே வராத நீா்த்தேக்கத்தின் வழியாகச் செல்லும் உப்பாறில் சில மாதங்களுக்கு முன்பு லட்சக்கணக்கில் செலவு செய்து தடுப்பணை கட்டியுள்ளனா். எதற்காக இந்த வீண்செலவு என்பது தெரியவில்லை என்றனா்.

Story image
Story image