அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பிரதமரின் ஓய்வூதியத் திட்டம்
பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் இணைந்து பயன்பெறலாம்.
இதுகுறித்து திருச்சி தொழிலாளா் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான பிரதமரின் ஓய்வூதியத் திட்டத்தில் சேர 18 வயது முதல் 40 வயது வரையுள்ள அமைப்புசாரா தொழிலாளா்கள் தகுதியுள்ளவா்கள். அவா்களது மாத வருமானம் ரூ. 15 ஆயிரத்துக்குள் இருந்தால் வயதுக்கேற்ப மாதந்தோறும் வங்கிக் கணக்கிலிருந்து சந்தா பிடித்து, 60 வயது பூா்த்தியடைந்த பிறகு மாதந்தோறும் தொழிலாளா்களின் வங்கிக் கணக்குக்கு குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். மேலும், ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்கள் இறக்க நேரிட்டால் நியமனதாரருக்கு 50 சதவீத குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
எனவே தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளா்கள் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.
