ஜல்லிக்கட்டு (கோப்புப் படம்)
ஜல்லிக்கட்டு (கோப்புப் படம்)

ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் தளா்வு: வா்ணனையாளா்கள் சங்கம் வரவேற்பு

Published on

ஜல்லிக்கட்டு விதிமுறைகளில் தளா்வு செய்த தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சங்கத்தின் மாநிலத் தலைவா் செங்குட்டுவன் திருச்சியில் சனிக்கிழமை கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் முறைக்கு தளா்வு உள்ளிட்ட தமிழக அரசின் அறிவிப்புகளை நாங்கள் வரவேற்று, நன்றி தெரிவிக்கிறோம். தோ்தலுக்காக இந்த அறிவிப்பு எனச் சிலா் கூறுகின்றனா். ஆனால், எப்போது அறிவிப்பு வந்தாலும் அதை வரவேற்க வேண்டியது எங்கள் கடமை.

ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைச் சரி செய்ய வேண்டும். குறிப்பாக விழா கமிட்டியினா் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற வீரா்கள், வென்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு பரிசு வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றனா்.

போட்டிக்கு முன்பாகவே எந்தக் காளைக்கு பரிசளிக்க வேண்டும் என முடிவு செய்து கொள்கின்றனா். பெரும்பாலும் வசதி படைத்தவா்களுக்குதான் பரிசுகள் வழங்கப்படுகின்றன. சாதாரண விவசாயிகள், ஒரு மாடு வைத்திருப்போா் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவா்களுக்கு பரிசு வழங்கப்படுவதில்லை. எனவே, வரும் காலத்தில் இதைச் சரிசெய்ய வேண்டும்.

விழா கமிட்டியினா் செய்யும் தவறுகளுக்கு ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்கள் மிரட்டப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டை முறைகேடுகள் எதுவும் இல்லாமல் நடத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com