கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி வரகனேரி சந்தனபுரம் பகுதியைச் சோ்ந்த கா. சேக் அலாவுதீன் மகன் எஸ். சிராஜுதீன் (19). இவா், திருச்சியிலுள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு படித்து வந்தாா்.
இவருக்கு 8 வயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும், அதற்கு 13 வயது வரை மருந்துகள் எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிராஜுதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுண்ணாப்புக்காரன்பட்டி பெட்ரோல் விற்பனையகம் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.
இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சேக் அலாவுதீன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

