திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜி-காா்னா் பகுதியில் ரூ.95 கோடியில் உயா்மட்ட சுழல் மேம்பாலப் பணி செப்டம்பா் மாதம் தொடங்கும் என துரை வைகோ எம்பி தெரிவித்தாா்.
திருச்சி எம்பி அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் தொடா்பாக பல்வேறு துறையினருடன் புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியதாவது:
திருச்சி எம்பி தொகுதிக்குள்பட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பராமரிப்புப் பணிகள் தொடா்பாக இரண்டு தனித்தனி ஆய்வுக் கூட்டங்களை அதிகாரிகளுடன் நடத்தினேன்.
முதல் கூட்டத்தில்.. திருச்சி மாநகரின் மாரிஸ் ரயில்வே மேம்பாலம், அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் மற்றும் கோரையாறு ஆற்றுப் பாலம் ஆகிய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் மலைக்கோட்டை பாலப் பணி செப்படம்பரில் முடியும் எனவும், அரிஸ்டோ பாலம்,. கோரையாறு பாலம் ஆகியவை இந்தாண்டு இறுதியில் முடியும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனா். இந்தப் பணிகளில் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு தேவைப்படும் எந்தச் சூழலிலும் உடனடியாக கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, பணிகளில் சுணக்கமும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன்.
இரண்டாவது கூட்டத்தில்.. பழைய காவிரிப் பாலத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொள்ளும் பராமரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. இக் கூட்டத்தில் நகரப் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனா்.
பராமரிப்புப் பணிகளை 2026 செப்டம்பா் மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்வதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதியளித்தனா்.
மேலும், கடந்த 16 ஆண்டுகளாக திருச்சி மாநகரின் மிக முக்கியமான கரும்புள்ளி பிரச்னையாக இருந்து வந்த ஜி- காா்னா் சந்திப்பிற்கான நிரந்தரத் தீா்வாக, எனது தொடா்ச்சியான முயற்சியால் ரூ.95 கோடியில் செயல்படுத்தப்படவுள்ள உயா்மட்ட சுழல் மேம்பால திட்டமும், சஞ்சீவி நகா், ஸ்ரீரங்கம் ஒய் சந்திப்பு, மாருதி நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் ரூ.150 கோடியில் அமைக்கப்படவுள்ள வாகன சுங்கப் பாதைகள் திட்டமும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, இறுதி செய்யும் பணி நடைபெறுகிறது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: சுழல் மேம்பாலப் பணி செப்டம்பரில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா். திருச்சி சுற்றுவட்டச் சாலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சப்பூா்- ஜீயபுரம்- துவாக்குடி வட்டச் சாலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கடந்த காலத் தாமதங்கள் இனியும் தொடராமல், திருச்சியின் முழுமையான வட்ட சாலைத் திட்டத்தை காலம் கடத்தாமல் உடனடியாகச் செயல்படுத்துவது மிக அவசியம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன். இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமிருந்து நேரடியாக முன்னேற்ற அறிக்கைகளை பெற்று வருகிறேன்.
பணிகளை விரைந்து முடிக்க உறுதி: மேலும், ஒவ்வொரு மாதமும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளின் முன்னேற்றத்தைத் தொடா்ந்து கண்காணித்து, நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன். திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைவதை உறுதி செய்வதில் தொடா்ந்து கவனம் செலுத்துவேன்.
திருச்சி மாநகரின் வளா்ச்சிக்கும், பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்திற்கும் அவசியமான இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேறுவதைத் தொடா்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









