திருச்சி மாநகராட்சி சாா்பில் பஞ்சப்பூரில் ரூ. 144.58 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு வணிக மையம் திறக்கத் தயாா் நிலையில் உள்ளது.
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூா் பகுதியில், கலைஞா் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு அருகிலேயே பன்னோக்கு வணிக மையத்தை பிரம்மாண்டமாக கட்ட திருச்சி மாநகராட்சி திட்டமிட்டது.
இதன்படி 6.40 ஏக்கரில் ரூ. 144.56 கோடியில் இந்த மையத்தை கட்ட முடிவு செய்து ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வணிக மைய கட்டுமானப் பணிகளும் தொடங்கின. ஆனால் பயணிகளின் வசதிக்காக முதலில் பேருந்து முனையப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி முன்னுரிமை அளித்ததால், வணிக மையத்தின் கட்டுமானப் பணிகளில் சற்றே தாமதம் ஏற்பட்டது. தற்போது, பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்குத் தயாராகவுள்ளது.
அனைத்தும் ஒரே இடத்தில்... பஞ்சப்பூா் பேருந்து முனையத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூா்த்தி செய்யும் வகையில் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வசதியுடன் தரைத் தளத்துடன் சோ்த்து மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
சில்லறை வணிகக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிரம்மாண்ட உணவுக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. பேருந்து முனையத்திலிருந்து பயணிகள் எளிதாக இந்த மையத்துக்கு வந்து செல்ல வசதியாக, பஞ்சப்பூா் பேருந்து முனையத்தின் மேல் தளத்திலிருந்து பன்னோக்கு மையத்துக்கு நேரடியாக ஒரு நடை பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
90-க்கும் மேற்பட்ட கடைகள்: ஒரே நேரத்தில் 200 இருசக்கர வாகனங்களையும், 77 நான்கு சக்கர வாகனங்களையும் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் அடித்தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சுரங்க வாகன நிறுத்தும் மையமாக இயங்கும். தரைத்தளத்தில் 90-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் அமையவுள்ளன.
முதல் தளத்தில் 36 கடைகளும், 10-க்கும் மேற்பட்ட உணவுக் கூடங்களும் அமைக்கப்படவுள்ளன. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் தளங்கள் தலா 644 சதுர மீட்டரிலான திறந்தவெளி வணிக இடங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளன.
பிரம்மாண்ட சுதாதார வளாகம்: பயணிகளின் அடிப்படைச் சுகாதாரத்தை உறுதி செய்ய தனியாக ஒரு பிரம்மாண்ட சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்களுக்கு 14 கழிவறைகளும், பெண்களுக்கு 28 கழிவறைகளும், 35 சிறுநீா் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காகப் பிரத்யேகமாக 4 கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் தளங்களுக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக 6 லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள், சாய்வுதளப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் பாதுகாப்பிற்காக நவீனக் கண்காணிப்புக் கேமராக்கள், அதிநவீனத் தீயணைப்புப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பிரத்யேகப் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவை உருவாக்கப்படுகின்றன.
தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகச் செல்லும் அனைவருக்கும் இந்த வணிக மையம், மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். இது திருச்சி மாநகரத்தின் வணிக வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், பயணிகளுக்குச் சா்வதேசத் தரத்திலான ஒரு பயண அனுபவத்தை வழங்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
திறப்பு எப்போது? இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் கூறுகையில், இந்த வணிக மையத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்குத் திறம்பட இயக்கவும், பராமரிக்கவும் பொது-தனியாா் கூட்டுப் பங்களிப்பு முறையின் கீழ் நிறுவனத்தைத் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, தகுதியான நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஒப்பந்தம் இறுதியானவுடன் வணிக மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்த மையத்தை திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அக்டோபருக்குள் தடையற்ற சுங்கவரி வசூல் முறை: கூடுதல் அதிகாரம் கேட்டு மாநகராட்சி கூட்டத்தில் தீா்மானம்

வேளாங்கண்ணியில் ரூ.48.96 கோடியில் ரயில் பெட்டி பராமரிப்பு மையம்: திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் தகவல்

ஒசூரில் கிராம வா்த்தக அழைப்பு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகங்களில் எம்.பி. ஆய்வு
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



