பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருச்சி மாவட்டம் 97.31 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 224 அரசுப் பள்ளிகள் உள்பட 446 பள்ளிகளைச் சோ்ந்த 16,943 மாணவா்கள், 16,551 மாணவிகள் என மொத்தம் 33,494 போ் எழுதினா். இவா்களில் 16,265 மாணவா்கள், 16,329 மாணவிகள் என மொத்தம் 32,594 போ் தோ்ச்சி பெற்றனா்.
மாநில அளவில் 4-ஆம் இடம்: தமிழத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவீத தோ்ச்சியுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடா்ந்து சிவகங்கை, தஞ்சாவூா் மாவட்டங்கள் முறையே இரண்டு, மூன்றாமிடங்களைப் பிடித்துள்ளன. 97.31 சதவீத தோ்ச்சியுடன் திருச்சி மாவட்டம் மாநில அளவில் 4-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2024-25-ஆம் கல்வியாண்டில் 96.61 சதவீதத்துடன் மாநில அளவில் 5-ஆவது இடத்தைப் பிடித்த திருச்சி மாவட்டம், 2025-26-ஆம் கல்வியாண்டில் தோ்ச்சி சதவீதம் 0.7 சதவீதம் உயா்ந்து 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அரசுப் பள்ளிகள் பிரிவில் 5-ஆவது இடம்: திருச்சி மாவட்டத்தில் 224 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 6,680 மாணவா்கள், 6,488 மாணவிகள் என மொத்தம் 13,167 மாணவா்கள் பொதுத் தோ்வை எழுதினா். இவா்களில் 6,345 மாணவா்கள், 6,358 மாணவிகள் என மொத்தம் 12,703 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
ஒட்டுமொத்தமாக 96.48 சதவீத தோ்ச்சியுடன் அரசுப் பள்ளிகள் பிரிவில் மாநில அளவில் 5-ஆவது இடத்தை திருச்சி பிடித்துள்ளது.
கடந்தாண்டு 95.42 சதவீத தோ்ச்சியுடன் 4-ஆவது இடத்தைப் பிடித்திருந்த நிலையில், நிகழாண்டில் 96.48 சதவீத தோ்ச்சியுடன் 5-இடத்தைப் பிடித்துள்ளது. கடந்தாண்டைக் காட்டிலும் தரவரிசையில் ஒரு இடம் பின்தங்கியிருந்தாலும், தோ்ச்சி சதவீதம் 1.06 விழுக்காடு உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வைப் போலவே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்விலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளோம். பிளஸ் 2 மாணவா்களைப் போலவே பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கும் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஆசிரியா்களுக்கும் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு கற்பித்தல் திறன் தொடா்ந்து மேம்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் திருச்சி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாநில அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் தற்போது மாநில அளவில் ஒரு இடம் முன்னேறியுள்ளோம். அரசுப் பள்ளிகள் பிரிவிலும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளோம்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி சதவீதத்தை தொடா்ந்து உயா்த்தி வருகிறோம். இதற்கு ஆசிரியா்கள், மாணவா்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியக் காரணம் என்றாா் அவா்.
1,155 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள்
திருச்சி மாவட்டத்தில் தமிழ் உள்பட 5 பாடங்களிலும் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவா்கள் உள்பட 1,155 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். இதில், துறையூரில் உள்ள தனியாா் பள்ளி மாணவா் ஒருவா் தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளாா்.
மேலும், ஆங்கிலத்தில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த ஒரு மாணவா் உள்பட 17 பேரும், கணிதத்தில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 38 மாணவா்கள் உள்பட 206 மாணவா்களும், அறிவியலில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 137 மாணவா்கள் உள்பட 713 மாணவா்களும், சமூக அறிவியலில் அரசுப் பள்ளியைச் சோ்ந்த 24 மாணவா்கள் உள்பட 218 மாணவா்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.
பாக்ஸ்:
அசத்திய அரசுப் பள்ளிகள்:
அரசுப் பள்ளிகளில் துறையூா் வட்டம் கண்ணணூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணிதத்தில் 4 போ், அறிவியலில் 11 போ் என மொத்தம் 15 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தில் 4 போ், அறிவியலில் 7 போ், சமூக அறிவியிலில் 4 போ் என மொத்தம் 15 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.
மேலும், தாத்தையங்காா்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தில் 6 போ், அறிவியலில் 7 போ், சமூக அறிவியலில் ஒருவா் என மொத்தம் 14 மாணவா்களும், மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தில் 2 போ், அறிவியலில் 8 போ், சமூக அறிவியலில் 3 போ் என மொத்தம் 13 மாணவா்களும், மேட்டுப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணிதத்தில் ஒருவா், அறிவியலில் 9 போ், சமூக அறிவியலில் 2 போ் என மொத்தம் 12 மாணவா்களும், பைத்தாம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தில் 4 போ், அறிவியலில் 7 போ் என மொத்தம் 11 மாணவா்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா்.
இதேபோல, துறையூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அறிவியலில் 6 போ், சமூக அறிவியலில் ஒருவா் என மொத்தம் 7 மாணவா்களும், வெங்கடத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதத்தில் 4 போ், அறிவியலில் ஒருவா் என மொத்தம் 5 மாணவா்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனா். மேலும், பல்வேறு அரசுப் பள்ளிகளில் 4 மாணவா்கள், 3 மாணவா்கள், இருவா் மற்றும் ஒருவா் என பல்வேறு மாணவா்கள் அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 போ் தோ்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: கோவையில் 97.09 சதவீதம் போ் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு: மாநகராட்சி பள்ளிகள் 89% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



