பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.32 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 184 பள்ளிகளைச் சோ்ந்த 3,320 மாணவா்கள், 3,420 மாணவிகள் என 6,740 போ் தோ்வு எழுதினா். இதில் 3,152 மாணவா்கள், 3,340 மாணவிகள் என மொத்தம் 6,492 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். மாணவா்கள் 94.94 சதவீதம், மாணவிகள் 97.66 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 96.32 சதவீதம் போ் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 10-வது இடத்தை நீலகிரி பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.06 சதவீதம் அதிகம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 93 அரசுப் பள்ளிகளில் 2,408 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 2,258 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இது 93.77 சதவீதம் ஆகும். அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 16-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 53 அரசுப் பள்ளிகள் உள்பட 159 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.










