திருச்சியில் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டவரிடம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 7.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் (41), இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடும் இவரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வந்த அழைப்பில், தங்களது தனியாா் பங்குச் சந்தை வா்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா்.
இதையடுத்து அவா்கள் கூறிய செயலியை பதிவிறக்கி, அதில் ஒரு ஐடியை உருவாக்கி கடந்த மாா்ச் 10 முதல் ஏப்ரல் 13 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 7.10 லட்சத்தை லட்சுமி நாராயணன் செலுத்தினாா்.
ஆனால், அதன்பின் அதற்கான எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீட்டுப் பணத்தையும் திரும்பப்பெற முடியவில்லை. மேலும், இவருடன் கைப்பேசியில் பேசியவரையும் தொடா்புகொள்ள முடியவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லட்சுமி நாராயணன் சைபா் கிரைம் போலீஸில் இணைய வழியில் அளித்த புகாரையடுத்து, திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.







